இவ்வாசிரியர் சிறப்புப் பாயிரம் கொடுத்துள்ளார். பிள்ளை அவர்களின் காலம் கி. பி. 19ஆம் நூற்றாண்டாகும். ஆதலின் இவர் தம் காலமும் அதுவேயாகும்.

காரணம்: இந்நூலுக்கு இரு சிறப்புப் பாயிரங்களுள. முழுமையாக உள்ள நூலின் சிறப்புப் பாயிரத்தில் நெல்லைப் பதியினரான சுப்பிரமணிய தேசிகர், எழுத்தொடு சொற்பொருள்யாப்பணி ஐந்தும் எளிதில் புலப்பட இயற்றித் தருகெனக் கூற இவ்வாசிரியர் இந்நூலைச் செய்தார் என உளது. யாப்பதிகாரம் மட்டும் வெளிவந்துள்ள நூலின் சிறப்புப் பாயிரத்தில், வேலூர் முத்துக்கிருட்டினன் கூற இவ்வாசிரியர் இந்நூலைச் செய்தார் என்றுளது. எனவே இவரது புலமை நலமறிந்த பலரும் விரும்பவே இந்நூலைச் செய்தார் எனத் தெரிகின்றது.

உரையாசிரியர்: இதன் உரையாசிரியர் திருப்பாற்கடல் நாதன் கவிராயர் ஆவர். திருநெல்வேலிப் பதியினர். இந்நூற்கமைந்த சிறப்புப் பாயிரம் இரண்டையும் இவரே இயற்றினர் என்ப.

C.T.E.ரேனியஸ் என்னும் செர்மன் அறிஞார் இவரிடம் தமிழ் பயின்றனர் என்பர். இவரது காலம் நூலாசிரியர் காலமே ஆகும். இவர் சைவ சமயத்தினர்.

உரைநலம்: இவர் தம் உரை நூல் முழுமைக்கும் உள்ளது. உரை பொழிப்புரையாக அமைந்துள்ளது எடுத்துக்காட்டுக்கள் மிகச் சுருக்கமாக வேண்டிய அளவுள்ளன. எழுத்ததிகாரத்தைப் பொறுத்தமட்டில் இளம்பூரணரையும், சொல்லதிகாரத்தைப் பொறுத்தமட்டில் சேனாவரையரையும் இருவரை பெரிதும் தழுவிச் செல்லுகிறது. எனினும், அவர்தம் உரைகளில் உள்ள பொருந்தாவுரைக்கோளை இவர் விலக்கியே செல்லுகிறார்.
 

 

‘‘குற்றிய லுகரமு மற்றென மொழிப’’ (42)
 

என்ற நூற்பாவிற்குக் குற்றியலுகரமும் மேலே ஒரு புள்ளியைப் பெறும் என இவர் உரைத்திருப்பது இதற்கரணாகும். பொருளதிகாரத்திற்கு உரை எழுதுங்கால் பேராசிரியர் உரையையே பெரிதும் தழுவிச் செல்லுகிறார். இவர் தரும் எடுத்துக் காட்டுக்களுட்சில, பிறர் கூறாத வகையில் அமைந்துள்ளன. 929ஆம் நூற்பாவில் ஆசிரிய விருத்தத்திற்குத் திருவிளையாடற் புராணப் பாடலையும், 948ஆம் நூற்பாவில் கலித்தாழிசைக்குக் கலிங்கத்துப்பரணியையும், 951ஆம் நூற்பாவில் கலிவிருத்தத்திற்கு ‘உலகெலாம் உணர்ந்து’ எனத் தொடங்கும் பெரிய புராணப் பாடலையும் எடுத்துக் காட்டுவது இதற்குச் சான்றாகும்.