இங்ஙனமே 903, 908ஆம் நூற்பாக்களில் சிதம்பரச் செய்யுட் கோவையிலுள்ள செய்யுள்களை எடுத்துக் காட்டுகிறார்.

பதிப்புக்கள்: இந்நூலின் யாப்பதிகாரம் மட்டும் 1842 அக்டோபர்த் திங்கள் 15ஆம் நாள் வெளிவந்துள்ளது. அதன்பின் இந்நூலின் எழுத்துச் சொல் ஆகிய இரண்டதிகாரங்கள் மட்டும் 1881 மேத் திங்களில் வெளிவந்துள்ளது. இது தென்னிந்திய ரெயில்வே அப்பாத்தகிரி திரு வெ. அப்பாசாமி மூப்பனார் அவர்களின் வேண்டுகோளின்படி திரிசிரபுரம் வருவாய்த்துறைத் தலைமைச் செயல (ஹெட் சிரஸ்தார்) ராகவிருந்த திரு பட்டாபிராம பிள்ளை அவர்களின் பொருளுதவியால் பதிப்பிக்கப்பட்டது. அடுத்து 1889ல் நூல் முழுதுமாகத் திரு பழனியாண்டி என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. அவ்வப்பொழுது பதிப்பித்து வெளியிட்ட அறிஞர் பெருமக்களுக்கு அறிஞர் உலகம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

என்னுடைய பணி: எனினும் இப்பதிப்புக்கள் படிப்போர்க்குத் தக்க விளக்க மின்றியும், ஆங்காங்குப் பல பிழைகள் மலிந்தும் இருந்தன. அவையனைத்தும் திருத்தப் பெற்று இப்பதிப்பு வெளிவருகின்றது. இப்பதிப்பில் நூற்பாக்களால் நுவலப்படும் பொருட்குத்தகத் தலைப்புக்கள் தரப்பெற்றுள்ளன. உரையும் காட்டும் தனித்தனியே நன்கு விளங்குமாறு பிரித்துக் காட்டப் பெற்றுள்ளன. செய்யுளாக அமைந்த எடுத்துக் காட்டுக்கள் அனைத்தும் அவ்வவ்வியாப்பமைதி பிழையாது சீர்பிரித்து அமைக்கப் பெற்றுள்ளன. இன்றியமையா இடங்கள் பலவற்றிற்கும் தக்க விளக்கவுரை எழுதி இணைக்கப் பெற்றுள்ளது. ஆராய்ச்சி முன்னுரையில் நூலாசிரியர் உரையாசிரியர் பற்றி அறியத்தகும் சிறப்புச் செய்திகளும், ‘‘நுவலும் பொருளும் திறனும்’’ என்னும் தலைப்பில் இந்நூலால் அறியப்படும் புதுமைச் செய்திகளும், பிற இலக்கண நூல்களோடு ஒத்தும் வேறுபட்டும் இருக்கும் செய்திகளும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

இந்நூலைப் பதிப்பிக்க வேண்டுமென என் கெழுதகை அன்பரும், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளருமான உயர்திரு தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை அவர்கள் விரும்பி அப்பொறுப்பை என்பால் நல்கினர். திருவருளால் அப்பணி நிறைவுபெற்றது. நிறைவு பெறச் செய்தருளிய திருவருளை வாழ்த்தி வணங்குகின்றேன் உயர்திரு வ. சுப்பையா பிள்ளை அவர்கள் தம் கழகவழிப் பல்வேறு வகையில் பல்வேறு நூல்களை வெளியிட்டு வருபவர்கள் ஆவர். குறிப்பாக மறைந்தோ அருகியோ வரும் நூல்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்