விளங்கவைக்கும் பெற்றித்தாய் மிளிர்கின்றது. கடல்போற் பரந்த
அகப்பொருள் விரிவை அங்கைநெல்லியெனச் சுருக்கி விளக்குவது இவ்வரிய
அகப்பொருள் நூல்.
இவ் வறுபான் நூற்பாவிற்கும் தெள்ளத் தெளிய விளக்கம்
உரையொன்றமைந்துள்ளது. இவ்வுரை கடைச் சங்கத்தில் வீற்றிருந்த புலவர்
பெருந்தகை நக்கீரனாரால் ஆக்கப்பட்டதெனவும், அதனை உப்பூரி
குடிகிழார் மகன் உருத்திர சன்மன் என்பான் கேட்டுச் சிறந்த உரையென
ஒப்புக்கொள்ளப் பெற்றதெனவும் இந்நூல், முதல்நூற்பா உரையகத்தே
கூறப்பெற்றுள்ளது நோக்கத்தக்கது: அது:
‘‘ஐயனாவான் உருத்திரசன்மரைத் தரல்வேண்டும்’’ என்று
வேண்டிக் கொடுபோந்து வெளியது உடீஇ, வெண்பூச்சூட்டி,
வெண்சாந்தணிந்து, கன்மாப்பலகை யேற்றி, இரீஇக் கீழிருந்து
சூத்திரப் பொருளுரைப்ப, எல்லாரும் முறையே உரைப்பக்கேட்டு
வாளா இருந்து, மதுரை மருதன் இளநாகனார் உரைத்த இடத்து ஒரோ
வழிக் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் நிறுத்தி, பின்னர்க்
கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இடத்துப் பதந்தொறும்
கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப
ஆர்ப்பெடுத்து, ‘மெய்யுரைபெற்றாம் இந்நூற்கு’ என்றார்.’’*
இவ்வுரைகொண்டு, இந்நூலுக்கு மெய்ம்மை
உரை காண்பார் இலராக,
ஒவ்வொரு புலவரும் தத்தம் அறிவுத் திறங்கொண்டு அவர்தம் அறிவின்
எல்லையளவுக்குக் கண்ட நுட்பத்தை உரைத்தாராக, அவ்வுரைகள்
பொருத்தமின்மையை உருத்திரசன்மன் மூங்கையானாகலான், அவன்
மெய்ப்பாட்டால் உணர்த்திப் பின்னர் நக்கீரனார் கண்ட வுரைக்கு மட்டும்
சிறந்ததென்று தன் மெய்ப்பாட்டினால் காட்ட, அதுகொண்டு
இவ்வுரையினையே சிறந்ததெனச் சங்கப்பேரவையினர் ஏற்றுக்
கொண்டனரென்று அறியக்கிடக்கின்றது.
இவ்வாறமைந்த உரையைக் கேட்ட காலம் கடைச்சங்க காலத்து,
உக்கிரப்பெருவழுதி அவைக்களம் எனக் குறிப்பிடப் பெற்றுள்ளதால்,
ஏறக்குறைய இரண்டாயிரம் யாண்டென ஊகிக்கலாம். வளமிக்க சிறந்த உரை.
காட்டாக இரண்டாவது சூத்திரத்துக்கு அவர் விளக்கங் கொடுத்துச் சொல்லும்
ஆற்றொழுக்குப் போன்ற நடை, கற்கக் கற்க இனிமை தருவதாக
இயைந்துள்ளது. இவர் களவு கற்பு என்னும் கைகோள் இரண்டில் களவு
என்பதற்கு (பக்கம் : 9) விளக்கியிருக்கும் விளக்கவுரை மிக்க சிறப்புடையது.
இன்னும் இவர்
* இந்நூல், பக்கம்: 8
|