அயிரை

128. நெய்தல்
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
சேயள் அரியோட் படர்தி;
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே.

உரை

அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர்

166. நெய்தல்
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்,
ஊரோ நன்றுமன், மரந்தை;
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.

உரை

காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார்

178. மருதம்
அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள்
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்;
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர்; நோகோ யானே.

உரை

கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது. - நெதும்பல்லியத்தை