சுறா (கோட்டுமீன்)

230. நெய்தல்
அம்ம வாழி, தோழி! கொண்கன்-
தான் அது துணிகுவனல்லன்; யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?-
வயச் சுறா வழங்கு நீர் அத்தம்
தவச் சில் நாளினன் வரவு அறியானே.

உரை

வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது. - அறிவுடை நம்பி

269. நெய்தல்
சேயாறு சென்று, துனைபரி அசாவாது,
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல-
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு,
'இனி வரின் எளியள்' என்னும் தூதே.

உரை

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது - கல்லாடனார்

304. நெய்தல்
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக்
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய,
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து
வெண் தோடு இரியும் வீ ததை கானல்,
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே.

உரை

வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன்

318. நெய்தல்
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்,
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப்
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா வஞ்சினம் செய்த
களவனும், கடவனும், புணைவனும், தானே.

உரை

கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன்