பரிமேலழகர் வரலாறு

இந்நூலுரையாசிரியராகிய பரிமேலழகர் ஸ்ரீ காஞ்சி நகரத்திலுள்ள ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் அருச்சகபரம்பரையிற் பிறந்தவர்; வைணவ சமயத்தினர். இவர் 1திருக்குறளுக்குச் சிறந்த உரையியற்றியிருப்பது யாவரும் அறிந்ததே. இவருடைய ஊர் முதலியன கர்ணபரம்பரைச் செய்தியாலும், 

"திருக்காஞ்சி வாழ்பரிமேலழகன், 
வள்ளுவர் நூற்கு வழிகாட்டி னான்றொண்டை மண்டலமே", 
"நீணிலங் கடந்தோன் றாடொழு மரபிற், பரிமேலழகன்" - 

(உரைச் சிறப்புப் பாயிரம்) என்பவற்றாலும் தெரிகின்றன.

இவர் திருமாலிடத்தும் திருமாலின் அடியார்களிடத்தும் மெய்யன்பு பூண்டொழுகியவர்; திருக்குறள், 39-ஆம் அதிகாரத்தின் அவதாரிகையில் திருமாலை இறையென்றதும், 2”திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக்கண்டேனே யென்னுமென்று பெரியாரும் பணித்தார்" என்றதும், மற்றும் அந்நூலுரையிலும் இந்நூலுரையிலும் எழுதியுள்ள பல குறிப்புக்களும் இதனைப் புலப்படுத்தும்; வடமொழியிலும் தென்மொழியிலும் மிக்க பயிற்சியுள்ளவர்; "வடநூற்றுறையும் தென்றிசைத் தமிழும், விதிமுறை பயின்ற நெறியறி புலவன்" என்பதனாலும் இவருடைய உரை நடையாலும் இது விளங்கும்.

அருச்சகரிற் பலர் பண்டைக்காலத்தில் வடமொழி தென்மொழிகளிற் சிறந்த பயிற்சியுள்ளவர்களாக இருந்ததற்கு ஸ்ரீகச்சியப்பசிவாசாரியர் முதலியோர்களே உதாரணமாவார்.

திருக்குறளுக்கும் இந்நூலுக்கும் இவர் உரை செய்தவரென்பதை இரண்டு உரைகளிலுமுள்ள ஒற்றுமைப் பகுதிகள் பலவற்றாலும் அறியலாகும்.

பண்டைக்காலத்தில் அரசர்களுடைய பிறழ்ச்சியால் இந்நூல் படித்துப் பாராட்டுவோரற்றுக் கிடந்ததென்பதும், அக்காலத்தில் பழைய நூல்களினிடையே தம் சொல்லை மடுத்து வேறுபடுத்தும் இயல்புள்ள கந்தியாரென்பவராலும் பொருள் தெரியாமல் எழுதியவர்களாலும் பாடகர்களாலும் 


1 "தருமர்", "திருத்தகு", "தெய்வப்புலமை", "பாலெல்லாம்", "வள்ளுவர் சீர்" என்னும் வெண்பாக்களும், "திருந்திய தமிழில்" என்னும் அகவலும், "வள்ளல் சிலைப்பெருமாள்" என்னும் கலித்துறையும் பிறவும் இதனைப் புலப்படுத்தும்.

2 திருவாய்மொழி, 34-ஆம் திருப்பதிகம்,