இந்நூலில் நேர்ந்த பலவகையான பிழைகள் அறிஞர்களுடைய செவிகளை வெதும்பச் செய்தலைத் தெரிந்து அப்பிழைகளை நீக்கி ஆராய்ந்து உண்மையான பாடத்தையறிந்து சிற்றறிவினர்க்கும் தெற்றெனப் புலப்படும்படி இவர் இவ்வுரையை இயற்றினரென்பதும் இந்நூல் உரைச்சிறப்புப் பாயிரத்தால் தெரிய வருகின்றன.

"விரும்பியருள்" என்னும் வெண்பா இந்நூலுக்கு உரை செய்யத்தொடங்கும் முன் இவர்கூறிய கடவுள் வணக்கமாக இருக்கலாமென்று தோன்றுகின்றது.

மிக அரியனவாகிய வடநூல்களின் கருத்துக்களை எளியனவாகத் தமிழ் நாட்டார் அறிந்துகொள்ளும்படி செய்த மகோபகாரிகளில் இவர் ஒருவர். சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல் முதலிய அழகுகளையமைத்து உரையெழுதுதல் இவருக்கு இயல்பு. பழைய செய்யுட்களையே உரைநடையாக உபயோகித்த உரையாசிரியர்களில் இவர் முதன்மையானவர்.

இவர் திருமாலடியவராக இருந்தும் பரிபாடலிற் சிவபெருமான், முருகக்கடவுள் முதலியோர்களைக் குறிப்பிடும் இடங்களில் அவரவர்களுடைய பெருமைகளை நன்கு விளக்கிச் செல்லுதலால் இவருடைய நடுவுநிலைமை புலனாகின்றது.

பரிமேலழகரையனெனவும் பரிமேலழகியாரெனவும் இவர் பெயர் வழங்கும்.

"வணபுகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்" (முருகு. 106) என்புழி, 'வசிந்து' என்பதற்குப் பகைவர்மார்பைப் பிளந்தென்று பொருள்கூறி, படைக்கலங்களால் வடுப்பட்டென்று பொருளுரைத்தல் இறைவனாதலிற் பொருந்தாதென்று விசேடவுரையு மெழுதிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் மறுப்பு, "வாண்மிகுவய மொய்ம்பின்" (பரி. 9 : 57) என்பதற்கு வாட்டழும்பு நெருங்கிய வெற்றி மொய்ம்பென்று இவர் பொருளெழுதியதைச் சுட்டியதாயின், இவர் இந்நூலுக்கு உரையியற்றிய காலம், அவர் பத்துப்பாட்டிற்கு உரையியற்றிய காலத்துக்கு முற்பட்டதென்று கொள்ளலாம்.

பாடினோர்களுடைய ஆழ்ந்த கருத்துக்களை விளக்கி இந்நூலுள் அங்கங்கே இவர் எழுதிய உரைநயங்களுட் பின்னர்ச் சுட்டியவை அறிந்து இன்புறற்பாலன:-

(மூன்றாம் பாட்டு) அடிகள் : 10-11, 36-43, 81-5; (4) 10; (5) 10, 37, 79, 81; (7) 40-50; (8) 72 - 3, 77; (9) 34; (10) 41-55, 93; (11) 1-15; (12) 90-92; (13) 55; (15) 30-33; (17) 32; (19) 22, 30-37, 49, 98; (20) 5, 54; (21) 22-8.