கடவுளை மாந்தர் நினைத்தற்கும் வழுத்துதற்கும் அக் கடவுட் கதைகளும்
உருவங்களும் இன்றியமையாதனவே என்பது முக்காலும் உண்மையே;
எனினும், இப் பரிபாடலின்கண் புராணக் கதைகளின் ஊடே ஊடே
இப்புலவர் பெருமக்கள் கடவுளியல்பினைத் தாம் உணர்ந்தாங்குப் பாடும்
பகுதிகள் சாலச் சிறந்த பகுதிகளாம்; அவற்றை ஓதுங்கால் எற்றோ
இவர்தம் அறிவுத் தெளிவென எம்மனோர் இறும்பூது எய்துவர் என்பது
திண்ணம்; இறைவனாற் படைக்கப்பட்ட இவ்வுலகப் பொருள்களிலே
அவ்விறைவனுடைய கைவண்ணமும் அறிவுவண்ணமும் திகழப்பெறுதலை
ஆசிரியர் இளவெயினனார் என்னும் புலவர் பெருமகன் கண்டு கூறும்
திறத்தினையும் அவர் கூறும் பிறஇறை இயல்புகளையும்
எடுத்துக்காட்டாகச் சில கூறுதும்.
 
  "அழல்புரை குழைகொழு நிழல்தரும் பலசினை
ஆலமுங் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்
எவ்வயி னோயும் நீயேநின் னார்வலர்
தொழுதகை யமைதியின் அமர்ந்தோயும் நீயே
அவரவர் ஏவ லாளனும் நீயே
அவரவர் செய்பொருட் கரணமும் நீயே"
 
எனவரும் இவ்வடிகள் கடலென விரிந்து ஆழ்ந்த கருத்துடையன ஆகும்.
"சமயமும் கடந்த சமரச நிலை" எனத்தாயுமான அடிகளார் கூறும்
நிலையிலே நின்றன்றோ இளவெயினனார் இவ்வடிகளை ஓதுகின்றார்.
இக் கருத்துணரின் பின்னர்ச் சமயப் பூசல் இவ்வுலகின்கண் இடம்
பெறாதன்றோ?
 
இனி, இப்புலவர் பெருமான் ஆழ்வாரின் நிலையினின்று திருமாலை
இரண்டு பாடலானும் (3 - 4) நாயன்மாராகிச் செவ்வேளை ஒரு
பாடலானும் பாடி, மேலே "எவ்வயினோயும் நீயே" என்ற தம் கருத்தை
வலியுறுத்துகின்றார்.
 
இனி, இவர் காட்சிப் பொருளிற் கடவுளியலைக் கண்டு கூறும்
அழகு பன்முறையும் பயின்று இன்புறும் பண்புடைத்து ஒருசில
வருமாறு:-
 
"தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்து நீ
வேதத்து மறைநீ பூதத்து முதலும் நீ
வெஞ்சுடர் ஒளியுநீ திங்களுள் அளியும் நீ