அனைத்தும்நீ அனைத்தின்உட் பொருளும்நீ ஆதலின்
உறைவும் உறைவதும் இலையே உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமா ரனையை"
என்றும்,
"நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள
நின், சுரத்தலும் வண்மையும் மாரியுள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள
நின், நாற்றமும் ஒண்மையும் பூவையுள
நின், தோற்றமும் அகலமும் நீரினுள
நின், உருவமும் ஒலியும் ஆகாயத்துள
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தினுள
அதனால், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏமமார்ந்த நிற்பிரிந்து
மேவல் சான்றன எல்லாம்"
என்றும் வரும்,
இனி, இறையியல்பாக இவர் கூறும் கருத்துக்கள் ஏற்றமிக்கன.
அவற்றுட் சில வருமாறு:-
"கடுநவை அணங்கும் கடுப்பும் நல்கலும்
கொடுமையும் செம்மையும் வெம்மையுந் தண்மையும்
உள்வழி யுடையை இல்வழி இலையே
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்றே மாற்றல் இலையே நினக்கு
மாற்றோ ரும்இலர் கேளிரும் இலரெனும்
வேற்றுமை யின்றது போற்றுநர்ப் பெறினே"
என்றும்,
"மனக்கோள் நினக்கென வடிவுவேறு இலையே"
என்றும்,
"வேலன் ஏத்தும் வெறியும் உள
அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல
நீயே வரம்பிற்று இவ்வுலகம் ஆதலின்
சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை"
என்றும்,
"சிறப்பினுள் உயர்பாகலும்
பிறப்பினுள் இழிபாகலும்
ஏனோர்நின் வலத்தினதே"
என்றும் வரும். |
|