அணிந்துரை
 
  மணிநிற மஞ்ஞை ஓங்கிய புட்கொடிப்
பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ
பணியொரீஇ நின்புகழ் ஏத்தி
அணிநெடுங் குன்றம் பாடுதுந் தொழுதும்
அவை, யாமும்எஞ் சுற்றமும் பரவுதும்
ஏம வைகல் பெறுகயாம் எனவே.

(பரிபா. 17:48 - 53)
 

நூல்
 
"திருந்து மொழிப் புலவர் அருந்தமிழ் ஆய்ந்த சங்கம்என்னும்
துங்கமலி கடலுள் அரிதின் எழுந்த பரிபாட்டமுதம்" எனச் சான்றோராற்
புகழப்பெற்ற இப் பரிபாடல், பாட்டும் தொகையும் கீழ்க்கணக்கும்
ஆகிய முத்திறத்த பழந் தமிழ்ப் பனுவல்களுள் நடுநின்ற தொகை
நூல் எட்டனுள் ஐந்தாவதாக நின்று திகழுமொரு தொகைநூல் ஆகும்.
தொகை நூல்கள் எட்டனையும்,
 
  "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்துங் கலியோட கம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை"
 

எனவரும் வெண்பாவான் உணரலாம்.

இனி, இவ் வெண்பாவின்கண் "ஓங்கு பரிபாடல்" என
உயர்த்தோதப் பட்ட இப் பரிபாடலைப்பற்றி ஆசிரியர்தொல்காப்பியனார்
தமது ஒப்பற்ற நூலிலே விதந்து கூறியுள்ளவற்றைச் சிறிது காண்பாம்.
 

  "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர்"

(அகத் - சூ. 56)

 

என்பது தொல்காப்பிய அகத்திணையியலுள் வருமொரு நூற்பாவாகும்.
இதன்கண், தமிழ்மொழிக்கே சிறந்துரிமையுடைய அகம் புறம் என்னும்
இருவகைப் பொருண்மரபு பற்றிப் பாடுங்கால் அகப்பொருளினை நாடக
வழக்கத்தானும் உலகியல் வழக்கத்தானும் பாடுதற்குத் தமிழ்ப்பாக்களுள்
வைத்துக் கலிப்பாவும் பரிபாட்டுமே

ப. 2