காப்பியச் செய்யுளியலில் மேற்கோளாக
உரையாசிரியர்களால்
எடுத்தாளப்பட்ட பாடல்கள் நான்கும், நாற்கவிராச நம்பி அகப்பொருள்
நூற்கண்மேற்கோளாகக் காட்டப்பெற்ற பாடல் ஒன்றும், புறத்திரட்டில்
நகரென்னும் பகுதியில் உள்ள உறுப்புக்கள் ஆறும் ஆக முப்பத்துமூன்று
பாடல்களேஉள்ளன.
இதற்குப் பழையவுரையாகிய பரிமேலழகர் உரைகொண்டு தெளிந்து
பொருளுணர்தல் கற்றுத்துறைபோய முற்றறிவினார்க்கன்றிப் பிறரால்
நுண்ணிதின் ஆய்ந்து பொருள்கோடல் அருமைப்பாடாகும். ஆதலால்,
கற்றுங்கேட்டும் தெள்ளிதின் உணரும் புலமைச் செல்வமிக்க
நல்லாரொருவரைக்கொண்டு உரைப்பொருட் சுருக்க விளக்கமும்,
சொல்லுரை கருத்துரை இலக்கணக்குறிப்புசொற்பொருள் முடிபுகளும்
இயைந்தனவாக ஒரு நல்லுரை வகுக்க எண்ணினேம். அவ்வெண்ணத்தைக்
கற்றுங்கேட்டும் அத்துறையிற் கைபோய பேரறிஞரான பெருமழைப்புலவர்,
திரு. பொ. வே.சோமசுந்தரனாரவர்கள் தம் அஃகியகன்ற லமைத்திறத்தால்
எழுதி முற்றுவித்து உதவியுள்ளார்கள்.
இவ்வருமையுரை, கற்றாரும் கற்றுத்துறைபோகும் மாணவமணிகளும்,
ஆய்புல அறிஞரும், கவிநலங் காணுநரும், தமிழ்க் காதல் தழைக்குமுளத்
தரும் கற்றுப் பயன்பெறத்தக்கதாகும்.
இச் சீரிய நூலை, அச்சிட்டு நூலுருவாக்கி அழகிய கட்டடத்துடன்
நம் செந்தமிழ்த் திருநாட்டின்கண் உலவிவர நம் கழக வழி
வெளியிட்டுள்ளோம்.
கற்றாரும் மற்றாரும் வாங்கிக் கற்று ஆய்புலவாணராக அமைந்து,
எம்மையும் இத்தகு மும்மைத் தமிழுக்கு முதன்மைப் பணிபுரியும்
நல்லாற்றில் ஊக்குவிப்பார்களெனநம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
|