சாலச் சிறந்தனவாம்;
ஏனைய அத்துணைச் சிறப்புடையன அல்ல என்று
ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்தினாராதல் தேற்றம். இதன்கண்
நாடக வழக்கு என்றதற்கு உரையாசிரியர் இளம்பூரண அடிகளார்:-
|
"சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக்
கூறுதல். அஃதாவது:- செல்வத்தானும் குலத்தானும் ஒழுக்கத்தானும்
அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து
எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி
அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும்
அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார்
எனவும், பிறவும் இந் நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு
வந்தனவாகக் கூறுதல்" என நுண்ணிதின் விளக்கங் கூறியுள்ளார்.
|
இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் கூத்தராவார் ஆடரங்
கிழைத்து அதன்கட் பன்னிறத் திரைகளும் வீழ்த்து அவ்வரங்கின்கண்
வேடந்தாங்கித் தோன்றி ஒருவர்க்கொருவர் வினாவும் விடையுமாய்
உரையாடல் நிகழ்த்திக் காண்போரை மகிழ்விக்குமாறுபோல, நல்லிசைப்
புலவனும் முதல் கரு என்னும் பொருள்களாலே காலமும் இடனும் ஆகிய
அரங்கினைப் படைத்து அவ் வரங்கின்கண் தன் உள்ளத்தே தோன்றிய
தலைவன் தலைவி தோழி செவிலி பாங்கன் முதலிய உறுப்பினர்களைக்
கொணர்ந்து நிறுத்தித் தன் கூற்றானன்றி அவ் வுறுப்பினர் கூற்றாகவே
வினாவும் செப்புமாய் உரையாடல் நிகழ்வித்து ஓதுவோர் அகக்கண்
முன்னர் ஓர் இனிய நாடகக் காட்சியினைத் தோன்றுவித்தலைக் கருதியே
நாடக வழக்கு என்றார் எனக் கருதுதல் மிகையாகாது. இங்ஙனம்
நாடகமாகக் கூறுதற்குக் கலிப்பாவும் பரிபாடலுமே தகுதியுடைய பாடல்கள்
ஆதலும், ஏனைய பாக்கள் தகுதியில்லாதனவாதலும் பின்வரும்
எடுத்துக்காட்டால் நுண்ணிதின் உணர்க.
|
கலியில் ஒரு நாடகம்
|
இடம்: முல்லை நிலத்திலேயுள்ள காட்டினூடே ஒரு நடைப்பாதை
காலம்: பிற்பகற்பொழுது.
உறுப்பினர்: ஓர் இடைய மங்கையும், ஓர்
இடைய ஆடவனும்.
|
(அவ் விடைமகள் மோர் விற்றுவிட்டுத் தன் வீடு
நோக்கிச் செல்கின்றாள்.அவ் விளைஞன் எதிரே வந்து அவளைத் தடுத்து நிறுத்திச்
சொல்லாடுகின்றான்.)
|