அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும்
தமிழ்ப்பேராசிரியருமாகிய
டாக்டர். அ. சிதம்பரநாத செட்டியார் M.A., P.H.D., அவர்கள்

அணிந்துரை

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு, பண்டைத்
தமிழகத்தின் அரசியல் நிலைமையையும் குடிவாழ்க்கையினையும்
பொருளாதாரச் செழுமையினையும் புலவர் பெருமக்களின்
உள்ளத்துணர்வுகளையும் தெரிவிக்கு முகமாக, இக்காலத் தமிழ்மக்கள்
நெஞ்சில் அரசியற் சீர்திருத்தங்களைத் தோற்றுவிக்கும் நூல்களில்
தலையாயது. இதனைப் பழையவுரையுடன் 1894 ஆம் ஆண்டு
மகாமகோபாத்தியாய டாக்டர். உ.வே. சாமிநாத ஐயரவர்கள்
முதற்பதிப்பாகவெளியிட்டார்கள். ஐயரவர்களால் பதிப்பிக்கப்பெற்ற
நூல்களில் நான்குமுறைக்கு மேலாகப் பல பதிப்புகளைப் பெற்று
இந்நூல் வெளிவந்திருத்தலொன்றே தமிழ்மக்கள்உள்ளத்திற்கு எழுச்
சிதரும் நூல்களில் தலைமையானது இஃதென்பதனை வெளிப்படுத்தும்.

சங்ககாலத் தமிழ்ப்புலவர்கள் மக்கள் வாழ்வில் அமைந்த
நல்லியல்புகளையேதம் பாடல்களிற் பாராட்டினார்கள். தீமை செய்வோர்
வேந்தராயினும் அஞ்சாது இடித்துரைத்து அவரைத் திருத்தினார்கள்.
இங்ஙனம் ’நல்லதன் நலனும் தீயதன் தீமையும்’ இவையென உள்ளவாறு
விளக்கி, மக்களுக்கு நல்லுணர்வு வழங்கிய நல்லிசைப் புலவர்களுடைய
உள்ளத் துணர்ச்சிகளின் பிழம்பாகவும், சங்ககாலத் தமிழகத்தின்
வரலாற்று நூலாகவும் திகழ்வது புறநானூறு. அரும்பெறல் நூலாகிய
இதனை மாணவர் முதல் முதியோர் வரை அனைவரும் பயிலுதல்
விரும்பத்தக்கது.

இந்நூலுக்கு அமைந்த பழையவுரை பாடற்பொருளைத்
தொகுத்துரைக்கும் பொழிப்புரையாகவும், சொன்முடிபும், இலக்கணக்
குறிப்பும், பிறநலங்களும் ஆகியவற்றை விளக்குஞ் சிறப்புரையாகவும்
அமைந்துளது. இப் பழையவுரை 266 ஆம் பாடல் வரையுமே
கிடைத்துளது. இதனுள்ளும் 242 ஆம் பாடலுக்கு மேலுள்ள
உரைப்பகுதிகள் சில இடங்களிற் சிதைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் புறநானூறு முழுவதுக்கும் யாவரும் எளிதாக உணரும்
வகையில் தெளிவான விளக்கவுரை யொன்று வெளிவருதல் தக்கதே.
இவ்வுரைத் தொண்டினைத் திரு. சித்தாந்த கலாநிதி,
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் தமிழார்வத்துடன் நிறைவேற்ற
முன் வந்து இந்நூல் முழுவதுக்கும் தெளிவான விளக்கவுரை யொன்றை
எழுதி முடித்துள்ளாரகள். இவர்கள் புறநானூற்றின் முதல் இருநூறு
பாடல்களுக்கு எழுதிய விளக்கவுரை சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தாரால் 1947 ஆம் ஆண்டில் முதற்