இலக்கம்; இலக்கு=இலை, எய்யுங்குறி, குறி, குறிக்கோள் குறித்த இடம். ஒரு குறித்த இடத்தை இலக்கு என்பது பாண்டி நாட்டு வழக்கு. இலக்கு-லக்ஷ் (வ.),

இலக்கு-இலக்கம்-லக்ஷ (வ.).

உரு: உருத்தல்=தோன்றுதல். உரு=தோற்றம். வடிவம், வடிவுடைப் பொருள், தனிப்பொருள் (உருப்படி), வடிவம் போன்ற இயல் வரம்பு.

உரு-உருவு-உருவம்-ரூப (வ.)

உருவு-உருபு=வேற்றும் வடிவம், அ வ் வ டி வு குறித்த எழுத்து அல்லது அசை அல்லது சொல்.

உலகு: உல்-உலா=சுற்றிவருதல். உல்-உல- உலவு-உலாவு. உலவுதல்=வளைதல், வட்டமாதல்,சுற்றுதல், திரிதல், உலவு-உலகு=உருண்டையாயிருப்பது. சுற்றிவருவது.

உலகு-உலகம்-லோக (வ.) வடமொழியில் லோக என்னும் சொற்குக் கூறப்படும் பொருட் கரணியம் பார்க்கப்படுவது என்பதே. அது look என்னும் ஆங்கிலச் சொல்லொடு தொடர்புடையது. அது வேறு; உலகத்தைக் குறிக்கும் தென் சொல்லின் திரிபு வேறு.

"காலம் உலகம் உயிரே யுடம்பே" (தொல். 541) என்று ஆசியர் எடுத்தோதுதலால் இவையெல்லாந் தென்சொல்லேயென்று நச்சினார்க்கினியருங் கூறுதல் காண்க.

ஏதம்; சிதைத்தல்=குலைத்தல்,வெட்டுதல், அழித்தல். சிதை-சித்(வ.). சிதை- சேதம் - ஏதம் = கேடு, குற்றம். சேதம்-சேத (வ.)

ஏது; ஏ-ஏவு-ஏசு-ஏது.

ஏசுதல்=ஏவுதல், செலுத்துதல். ''கொல்லம் பேசி'' (தேவா. 380: 6)

ஏது=ஏவுகை, தூண்டுதல், கரணியம். ஏது- ஹேது (வ.)

ஏமம்: ஏ= உயர்ச்சி. மரம், கோபுரம், மலைமுதலிய உயர்ந்த இடங்கள் கொடிய விலங்குகட்கும் பகைவர்க்கும் தப்பிப் பாதுகாப்போடிருத்தற்கு ஏற்றவையாயிருத்தலின், உயர்ச்சிக் கருத்திற் பாதுகாப்புக் கருத்துத் தோன்றிற்று.