காலம்: கோல் - கால், கம்பு, கம்பம், தூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு. கால் போல் நீண்டு செல்லும் நீர்க்கால், நில்லாது நீண்டு செல்லும் காற்று, நீண்டு சென்று கொண்டேயிருக்கும் நேரம் அல்லது காலம். கால் - காலம் - கால(வ.). வட மொழியில் இதற்கு வேரில்லை. கால் என்னும் மூல வடிவும் காலை என்னும் திரி சொல்லும் இல்லை.

"கால முலகம் உயிரே யுடம்பே
பால்பிரிந் திசையா வுயர்திணை மேன." (தொல். 541)

குடங்கர்: குடம் - குடங்கு - குடங்கர் = குடம். குடம்போன்ற சிறு குடிசை. குடங்கர் - குடங்கக. (வ.).

குடி: குடி - வளைவு, வட்டமான குடியிருப்பு. முதற்காலத்தில் குடியிருப்பெல்லாம் வட்டமாகக் கட்டப்பட்டிருந்ததால், வீடு குடி யெனப்பட்டது. குடி - குடி (வ.).

குடி = இல், இல்லத்தில் வாழும் மனைவி; மனைவியொடு கூடிய குடும்பம், கூட்டுக் குடும்பம், பல குடும்பஞ்சேர்ந்த இனம், பல தலை முறையாக வந்த குடும்பத் தொடர்ச்சி குடும்ப அல்லது இன மரபுப்பண்பு, பல வீடுகள் சேர்ந்த வூர்.

குணம்: கொள் - கொள்கை = கொண்ட கருத்து அல்லது நம்பிக்கை, கொண்டுள்ள இயல்பு. கொள் - கோள் = தன்மை. கொள் - (கொண்) - (கொணம்) - குணம்=கொண்ட தன்மை, தன்மை.

வடமொழியிற் கிரஹ் (பற்று) என்பதை மூலமாகக் காட்டுவர்.

குதி: குத்து- குதி, குதித்தல் = நேராக மேலெழுதல், குதித்துத் தாண்டுதல், தாண்டிக் கடத்தல், வெல்லுதல். குதி - கூர்த் (வ.).

கூத்து: குத்து - குதி - கூத்து - கூர்த்த (வ.).

குலம்: குல் - குல - குலவு. குலவுதல் கூடுதல். குல் - குலம் = கூட்டம், இனம், குடி, குலம் - குல (வ.).

குவளை: இது தமிழகத்து மலர், ஒரு பேரெண்ணையுங் குறிக்கும். குவளை - குவல (வ.).

குழவி: குழ - குழவு = இளமை. குழவு - குழவி. குழ - குழந்தை, குழ - கொழுந்து, குழ - குட (வ.).

கூகை: கூகூ - கூகை - கூக (வ.).