கூழ்: குழை-கூழ் = குழைந்த பொருள், இழைந்த வுணவு கூழ் - கூர(வ.).

கோட்டி: 401 ஆம் குறளுரையைப் பார்க்க.

கோடி: குடுமி=உச்சி, கோடி=கடைசி, முதற்காலத்துக் கடைசியெண்.

"ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல." (337)

"அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்." (954)

"ஐஅம் பல்என வரூஉம் இறுதி 
அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்." (தொல், 393)

என்பவை, திருவள்ளுவர் காலத்திற்கு மட்டுமின்றித் தொல்காப்பியர் காலத்திற்கும் முன்பே, கோடி யென்னும் எண்ணும், அடுக்கிய கோடிகளாகிய எண்களும் தமிழரால் வழங்கபட்டமையைத் தெரிவிக்கும். கோடி - கோடி (வ.).

சமன்: அம்முதல்=பொருந்துதல், ஒத்தல் அம்-சம்-சமம்-ஒப்பு. சமம்-சமன் = துலைக்கோல். நிறுக்குமுன் இருபுறமும் ஒத்து நிற்கும் நிலை. சமம் - ஸம (வ.).

சாகாடு: சருக்கு-சக்கு-சக்கடம்-சகடம்-சகடு-சாகாடு-சாடு. சகடு-சகடி-சகடிகை. சகடம்-சகட்ட (வ.).

சிவிகை: சிவிதல்=சுருங்குதல், சிறுத்தல். சிவி-சிவிகை-சிறிய மூடு பல்லக்கு. சிவிகை - சிவிகா, சிபிகா (வ.).

சுதை: சுதை = சுதசுத வென்றிருக்குஞ் சாந்து. சுதசுத வென்றிருத்தல் சேறுபோலிருத்தல். அது இன்று சொதசொத வென்றிருத்தல் என மருவிற்று.

இனி, சுல் (வெள்ளி)-(சுலை)-சுதை=வெண்சாந்து எனினுமாம். சுதை-ஸுதா (வ.).

சூது: இது ஒருவகைக் காயின் பெயர். சூது-சூத (வ.).

தண்டம்: தள்-தளம்=கனம், கூட்டம், படை. தளம்-தடம்=பெருமை.