திரு: தில்-திர்-திரள். திர்-திரு=திரண்ட செல்வம், செல்வத்தின் தெய்வம். ஒ.நோ: வெறுத்தல் செறிதல். வெறு-வெறுக்கை=செல்வம். திரு-ஸ்ரீ (வ.).=ச்ரீ.

"நிறையே அருளே உணர்வொடு திருவென"

என்று (தொல். 1219), காதலர் ஒப்புமைக் கூறுகளுள், திருவும் ஒன்றாகத் தொன்று தொட்டுச் சொல்லப்பட்டு வருதல் காண்க.

தீ: தேய்தல்=உரசிச் சிறுத்தல், உரசித்தீப்பிடித்தல். தேய்-தே=நெருப்பு, நெருப்பாகிய=தெய்வம், தெய்வம், தேய்-தேயு=நெருப்பு (பிங்.).

தே-தீ=நெருப்பு. தீமை=தீயின் தன்மை நன்மை யல்லாதது, தேய்-தீய். தீய்தல் = எரிதல், விளங்குதல். தீய்-தீ (வ.). தீ-தீ (வ.).

துலை: துல் - துன், துன்னுதல்=பொருந்துதல். துல் - துலை=ஒப்பு, இருபுறமும் ஒத்த நிறைகோல், துல் - துலம்=நிறைகோல், ஒரு நிறை. துல்-துலா=நிறைகோல், நிறைகோல் போன்ற ஏற்ற மரம். துலா - துலாம்=ஒரு நிறை. துல் - துல்லியம்=ஒப்பு. துலை-துலா (வ.).

தூண்: துன்னுதல்=பொருந்துதல், சேர்தல். துணை-சேர்க்கை, இரண்டு, ஒப்பு. துணர்=கொத்து. துன்-(துண்)-தூண்=பருத்த கம்பம், மண்டபக்கால். தூண் தூணி. தூணித்தல்= பருத்தல். துண்-(தொண்)-தொண்ணை= பருத்தது. தூண்= தூணம் =பெருந்தூண். தூணம் - ஸ்தூண, ஸ்தூணா (வ.).

தூது: துது-துதி=யானையின் முன்னுள்ள கை (துதிக்கை), துது - தூது=அரசனுக்கு முன் சென்று அவன் வருகையை அறிவிப்பவன், அரசன் விடுத்த செய்தியை வேற்றரசரிடம் சொல்பவன், அரசன் விடுக்கும் செய்தி. தூது -தூதன் (ஆ.பா.). தூதி(பெ.பா.).

உது (உதழ்-உதடு), குது (தெ. கொத்த=புதிய), நுது (நுதல்=மண்டையின் முன்னுள்ள நெற்றி. நுதலுதல் =முன் சொல்லித் தொடங்குதல்), புது, முது (முதல்) என உ, கு, நு, பு, மு என்னும் பிற சொன் முதலடிகளைக் கொண்டும் முன்மைக் கருத்துச் சொற்கள் தோன்றியிருத்தலைக் காண்க. தூது-தூத(வ.).