பகவன்: பகு-பகவு-பகவன்=அனைத்துயிர்க்கும் பகுத்தளித்துக் காப்பவன். பகவன்- பகவன்(வ. bhagavan).

பகு: பகு-பஜ் (வ. bhaj).

படாம்: பட்டுதல் தட்டுதல். பட்டு-பட்டை=தட்டையாகத் தட்டப்பட்டது. பட்டு-பட்டம்=பட்டையான தகடு, பட்டையான துணி, பட்டம்- படம்=துணி, துணியிலெழுதிய ஓவியம், சித்திரச் சீலை, யானை முகபடாம். படம்-படாம். ஒ. நோ: கடம்-கடாம். படம் -பட (வ.). படம் (படாம்)-பட்ட (வ.).

படிவம்: படுதல் விழுதல். படு-படி. படிதல்=ஒன்றின்மேல் இன்னொன்று விழுதல், விழுந்து பதிதல், பதிந்து உருவ வடிவம் அமைதல்.

படி = உருவம், உடம்பு, ஒப்பு. அப்படி=அதுபோல்
படி - படிவு - படிவம். படி - படிமை - படிமம்
படி - வடி, படிவு - வடிவு. படிவம் - வடிவம்.
படி - ப்ரதி (வ.). படிமை - ப்ரதிமா (வ.).

பதம்: பதி - பதம்=பதிந்திருக்கும் நிலை அல்லது நிலைமை, பதவி. பதம் - பதவு - பதவி - பதவீ (வ.).

பருவம்: பரு - பருமம் - பருவம் பருத்தநிலை, பயன்படுநிலை, தக்க காலம். இனி, பழு - பழுவம் - பருவம் என்றுமாம். பருவம் - பர்வன் (வ.).

பள்ளி: பள் - பள்ளம் = நிலமட்டத்திற்குத் தாழ்வான இடம். பள்ளையன் = குள்ளன். பள்ளையாடு = தாழ்மட்டமான ஆடு.

பள் - பள்ளி=(1). பள்ளம். பள்ளிக்கிருத்தல் = பள்ளத்திற்கிடத்தல்.

(2.) படுக்கை. நிற்றலிருத்தலினும் தாழ்மட்டமான நிலையடைதல். பள்ளி கொள்ளுதல் = படுத்தல். பள்ளியெழுச்சி = படுக்கை விட்டெழுதல். 3. படுக்கையறை, 4. படுக்கும் வீடு, 5. வீடு. மடைப்பள்ளி = சமையல்வீடு. 6. வீடுபோன்ற அமைப்பு. பள்ளியோடம் வீடுபோலமைத்த ஓடம். 7. அரசன் வீடாகிய அரண்மனை. 8. தெய்வ வீடாகிய கோயில், 9. துறவிகள் தங்கும் தவ நிலையம். 10. பலர் பள்ளி கொள்ளும் ஊர் மடம்.