யென்றது நெஞ்சழுத்தம் மிக்க பொய். இவற்றை நம்பிய புலவரோ தமிழகத்தைக் கெடுத்த தசைப்பிண்டங்கள். திருக்குறளைப் பொய்யாமொழி யென்றமையின், வேதம் பொய்மொழியென்பது எதிர் நிலை யளவையாற் பெறப்படும்.

மாங்குடி மருதனார்

24.ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோ
ருள்ளாதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

(பொ--ரை.) திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும்.

எறிச்சலூர் மலாடனார்

25.பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே
தூய துறவறமொன் றூழாக - வாய
வறத்துப்பா னால்வகையா வாய்ந்துரைத்தார் நூலின்
றிறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.

(பொ--ரை.) திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.

போக்கியார்

26.அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்
றெண்பொரு ளேழா மிவை.

(பொ--ரை.) திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம்.