(பொ--ரை.)
எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம்.
உருத்திர சன்ம கண்ணர்
31. மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க்
காய்தொறு மூறு மறிவு.
(பொ--ரை.)
நீர்நிலை யடுத்த மணலைத் தோண்டுந்தோறும் நீரூறும். குழந்தை வாய்வைத் துறிஞ்சுந்தோறும் தாய்முலை சுரக்கும். அவைபோல், திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவு பெருகும்.
பெருஞ்சித்திரனார்
32.ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவினா
லோதிய வொண்பொரு ளெல்லா- முரைத்ததனாற்
றாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன.
(பொ--ரை.)
மாலையணிந்த பாண்டிய வேந்தே! திருவள்ளுவர் வேதங்களின் சிறந்தபொருளை யெல்லாம் குறள்வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை?
நரிவெரூஉத் தலையார்
33.இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு
முன்பறியச் சொன்ன முதுமொழிநூன்- மன்பதைகட்
குள்ள வரிதென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்.
(பொ--ரை.)
நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப்பட்ட நால் வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால், அவற்றை யெளிதா யுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
மதுரைத்தமிழாசிரியர் செங்குன் றூர்கிழார்
34.புலவர் திருவருள் ளுவரன்றிப் பூமேற்
சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு
|