இவரது குறிப்பு, மேற்குறித்த இரு நூல்களுக்கும் பின்னர் எழுந்தது என்றும், இரண்டையும் இணைப்பதற்கு இவர் செய்த ஊகம் என்றும் கொள்ளத் தக்கது.

அகநானூற்றுப் பாடல் ஒன்றில் (44),

நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறல் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்ப்
பருந்துபடப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி

என, சோழன் ஒருவன் கணையன் என்பானை வென்று கழுமலம் கொண்ட செய்தி வந்துள்ளது. இதன் பழைய உரை, 'நன்னன் முதலாயினார் சேரன் படைத்தலைவர் ; கணையன் சேரன் படை முதலி ; முன் சொன்னவர்க்குப் பிரதானி. கழுமலம் ஓர் ஊர்' என்று குறித்துள்ளது. அகம் 386ல் கணையன் என்ற பெயருடைய மல்லன் ஒருவன் குறிப்பிடப் பெறுகிறான். இந்த இரு பாடல்களிலும் சுட்டப்பெறும் கணையன் என்பானுக்கும் கணைக்காலிரும்பொறைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. 'கணையன் அகப்படக் கழுமலம் தந்த' என்பது கணைக்காலிரும் பொறையோடு தொடர்புடையது போலக் காணப்படினும், அப் பாடலில் குறித்த செய்திகள் தெளிவின்றியிருக்கின்றன. இது களவழி நாற்பது குறிக்கும் போரைக் குறித்ததாகக்கொள்ள முடியாது.

சோழனுக்கும் சேரனுக்கும் போர் நிகழ்ந்த இடமாகிய 'போர்' என்பது பற்றித் தெரியவரும் செய்திகளை நோக்குவோம். இந்த ஊர் சோழநாட்டில் உள்ளது எனச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

இழை அணி யானைச் சோழர் மறவன்
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பைப்
புனல் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல் போல்

என்று அகநானூற்றிலும் (326),

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன

என்று நற்றிணையிலும் (10), பழையனுக்கு உரியதாகப்போர் என்ற ஊர் குறிக்கப் படுகிறது. இப் பழையன் சோழனுக்குக் கீழ்ப்பட்ட ஒரு தலைவன் ஆவன். இவனுக்கு உரியதாகக் கூறப்பெறும் போர் என்னும் ஊர் நீர்வளம் நிறைந்தது என்பதும், சோழ நாட்டில் உள்ளது என்பதும் மேற்குறித்த செய்யுட் பகுதியால் அறியலாம். திருப்போர் என்பதில் திரு என்பதை அடைமொழியாகக் கொள்ளல் வேண்டும். இங்ஙனம் கொள்ளாது திருப்போர் என்பதே ஊர்ப்பெயர் என்றும், அது திருப்பூர் என இக் காலத்து வழங்கும் கொங்கு நாட்டு ஊராக இருக்கலாம் என்றும் கருதுவாரும் உண்டு. போர் என்னும் பழையனது ஊர் நீர் வளம் செறிந்தது என்று அகநானூற்றுப் பாடல் குறிப்பதனால், அது போர் நிகழ்தற்கு ஏற்ற இடமாதல் இல்லை. எனவே, அது சேரனுக்குரித்தான ஓர் ஊராக இருத்தல் கூடும். 368-ஆம் புறப்பாட்டின் பழைய குறிப்பு, 'சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன்