வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியோடு போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தனைக் கழாத்தலையார் பாடியது' என்று உள்ளது. இக் குறிப்பினால் போர் என்னும் களம் சேர சோழ நாடுகளுக்கு இடைப்பட்டதாய், இரு பேரரசர்களும் வழிவழியாகப் போர் செய்வதற்கு மேற்கொண்ட இடமாக அமைந்திருந்தது போலும்!

புறநானூற்றுக் குறிப்பும் களவழி நூல்குறிப்பும் சரித்திர அடிப்படையை ஆதாரமாகக் கொண்டனவல்ல என்று அபிப்பிராயப்படுகிறார் ஓர் ஆராய்ச்சியாளர். குலோத்துங்க சோழன் உலாவின் பழைய உரையில், 'களவழி கொண்டோன் தஞ்சை விசயாலயன்' (19-20) என்பது குறிக்கப் பெற்றிருக்கிறது. இது உண்மையாயிருக்கலாமோ என்று ஐயுறுவாரும் உளர். இக் கருத்துகள் மேலும் ஆராய்தற்கு உரியனவாம். பெருங்கதையிலும் சிந்தாமணியிலும் வரும் ஒரு சில கருத்துகள் இந் நூலோடு பெரிதும் ஒத்துள்ளமையும் கவனிக்கத் தக்கது. யாவற்றையும் கூர்ந்து நோக்கின், இது பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய நூலாதல் கூடும் என்று ஊகிக்கலாம்.

களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர். இவரது பெயர் இயற்பெயரா, காரணப்பெயரா என்பது துணியக்கூடவில்லை. காரணப் பெயராயின், இவரைப் பொய்கை நாட்டில் தோன்றியவர் என்றோ, அல்லது பொய்கை ஊரினர் என்றோ கொள்ளலாம். சேரன்பொருட்டு இவர் களவழி நாற்பது பாடுதலின், இவரும் சேர நாட்டைச் சார்ந்தவராகலாம். சங்கத் தொகை நூல்களில் மூன்று பாடல்களைப் பாடியவரும் (புறம் 48, 49: நற். 18), சேரமான் கோக்கோதை மார்பனைப் புகழ்பவரும் ஆகிய பொய்கையார் இவருக்கு முந்தியவராதல் வேண்டும். அப் பொய்கையார் தொண்டி என்னும் ஊரைச் சார்ந்தவர்.

கோதை மார்பின் கோதையானும் ......
கள் நாறும்மே கானல் அம் தொண்டி,
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்

என்பது அவர் வாக்கு (புறம்48). அவர் பாடிய நற்றிணைப் பாடலிலும் தொண்டியைப்பற்றிய குறிப்பு உள்ளது.

முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய பொய்கையாழ்வார் மேற்குறித்த இருவரினும் வேறுபட்டவர். அவர் தொண்டைநாட்டுக் கச்சிப் பதியினர். மால் அடியை அல்லால் மற்று எண்ணத்தான் ஆமோ இமை? (31) என்றும்,

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் (64)

என்றும்,

மாயவனை அல்லால் இறையேனும் ஏத்தாது என் நா (94)

என்றும், திருமால் பத்தியில் அவர் விஞ்சி நிற்பவர். பதினெண் கீழ்க்கணக்கிலும் வழங்காத வடசொற்கள் பல அவரது அந்தாதியில் உள்ளன. யாப்பருங்கல விருத்தியுரையில் பொய்கையார் வாக்காகச் சில பாடல்கள் மேற்கோளாக எடுத்தாளப்பெற்றுள்ளன. பன்னிரு பாட்டியலில் பொய்கையார் பெயரால் சில சூத்திரங்கள் உள்ளன. இந்த இரு நூல்களிலும் குறிக்கப் பெற்றவர் முன் குறித்த மூவரினும் வேறானவர் என்றே கொள்ள இடமுண்டு. எனவே, பொய்கையார் என்னும் பெயருடையார் பலர் பல்வேறு காலத்தில் வாழ்ந்துள்ளமை புலனாம்.