அவர்களுள் களவழி நாற்பது பாடிய பொய்கையாரை இடைக்காலத்தில், சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆசிரியர்களின் காலத்தை ஒட்டி வாழ்ந்தவராகக் கொள்ளலாம். களவழி நாற்பதில் 41 பாடல்கள் காணப்பெறுகின்றன. நூற் பெயருக்கு ஏற்ப 40 செய்யுட்கள் இருத்தலே முறை. ஒரு பாடல் மிகுந்து காண்பது ஐயத்தை விளைப்பதொன்றாம். இந்த 41 பாடல்களுக்கும் பழைய உரை இருப்பதால், அந்த உரைகாரர் காலத்திற்கு முன்பே 41 பாடல்கள் நூலுள் அமைந்து விட்டமை புலனாம். புறத்திரட்டில் 'களம் என்ற அதிகாரத்தில் களவழி நாற்பதின் செய்யுட்களுள் பத்தினை அத் தொகைநூல் ஆசிரியர் கோத்துள்ளார். அவர் கொடுத்துள்ள பாடல்களில் 'படைப்பொலி தார் மன்னர்' (1427) என்ற பாடல் மட்டும் இப்பொழுதுள்ள களவழி நாற்பது ஏட்டுப் பிரதிகளில் இல்லை. இப் பாடலும் சேர, 42 பாடல்களாகும். இப்புறத்திரட்டுச் செய்யுள் மிகைப் பாடலாக நூல் இறுதியில் அமைக்கப்பெற்றுள்ளது. இந் நூற் பாடல்களில் நாலடி அளவியல் வெண்பாக்களும் (22) பஃறொடை வெண்பாக்களும் (19) காணப்படுகின்றன. ஐந்து செய்யுட்களைத் தவிர ஏனையவெல்லாம் 'அட்டகளத்து' என்று முடிகின்றன. மூன்று செய்யுட்கள் (15, 21,29), 'பொருத களத்து' என்றும், ஒரு செய்யுள் (40), 'கணைமாரிபெய்த களத்து' என்றும், மற்றொரு செய்யுள் (35), 'அரசு உவாவீழ்ந்த களத்து' என்றும் முடிவு பெற்றுள்ளன. யானை, குதிரை, தேர், தானை, என்ற நால்வகைப் படைப்போரும் குறிக்கப்படினும், யானைப் போரைப் பற்றிய செய்யுட்களே மிகுதியாய் உள்ளன. சேரன் யானைப்படை மிகுதியுடையனாதல் பற்றி, அதனை மிகுதியாக வருணித்தார் போலும்! போர்க்களக் காட்சிகளை உவமை வாயிலாக ஆசிரியர் விளக்கும் திறம் மிக அழகாய் அமைந்துள்ளது. பின்னூல்கள் போர்க்களத்தை வருணித்துப் பாடுதலுக்கு இந்நூல் வழிகாட்டியாய் அமைந்தது என்று கூறலாம். இந் நூற் செய்யுட்கள் நச்சினார்க்கினியர் முதலிய பழைய உரைகாரர்களால் மேற்கோளாகக் காட்டப்பெறும் சிறப்பினைப் பெற்றுள்ளன. இந் நூல் முழுமைக்கும் பழைய உரை காணப்படுகிறது.
|