ஆராய்ச்சி முன்னுரை

உலகவறவியை அடைந்து சம்பாபதி கோயிலினுட் புகுந்தான். உடனே முன்னே அவ்விடத்திற்புகுந்து இவன் வரவை நோக்கிக்கொண்டுசினத்துடன் இருந்த காஞ்சனன், "இவன் இவளிடத்திலேயே வந்தனன்," என்று துணிந்து விரைந்து எழுந்து சென்று வாளால் அவன் தோளைத் துணித்து வீழ்த்தினான். பின், காயசண்டிகையைக் கைப்பற்றிக் கொண்டு செல்வோமென எண்ணி அவளருகே சென்றான். அப்போது அங்குள்ள கந்திற்பாவையானது, "காஞ்சன! செல்லாதே! செல்லாதே! இவள் உன் மனைவி அல்லள்; இவ் வடிவம் மணிமேகலை கொண்ட வேற்றுவடிவம்; காயசண்டிகை கடும்பசி நீங்கி வானில் செல்லுங்கால் நிகழ்ந்ததைக் கேள். வான்வழியாகச்செல்வோர் துர்க்கை எழுந்தருளியிருக்கும் விந்தமலைக்கு நேராக மேலே செல்லார். சென்றால் அம் மலையைக் காக்கும் விந்தாகடிகை என்பவள், தன் சாயையினால் இழுத்துத் தன் வயிற்றில் அடக்கிக்கொள்வாள். இதனையறியாத காயசண்டிகை அம் மலைக்கு நேராக மேற்சென்று அவள் வயிற்றில் அடங்கி விட்டாள். காஞ்சன! இதனையும் கேள்! உதயகுமரன் ஊழ்வினையினால், இறந்தானாயினும் நீ ஆராயாமற் கொன்றாய்; அதனால், மிக்க தீவினையாளன் ஆயினாய்; அவ் வினை உன்னை விடாது தொடர்ந்து வருத்தும்," என்றுரைத்தது.

காஞ்சனன் அதுகேட்டு மனம் வருந்தித் தன் நகரத்திற்குச் சென்றான்.

பின்பு, சம்பாபதி கோயிலிலிருந்த மணிமேகலை காஞ்சனன் செய்தியையும் உதயகுமரன் வெட்டுண்டிறந்ததையும் காஞ்சனனுக்குக் கந்திற்பாவை கூறிய வியத்தகு மொழியையும் அறிந்து எழுந்து, 'இவ் வுருத்தொலைவதாக,' என்றுதான் கொண்ட மாற்றுருவத்தை ஒழித்து, உதயகுமரன் வடிவினை நோக்கி, வெவ்வினை சூழ, 'காஞ்சனன் சினத்தால் விளிந்தனையோ!' எனப் பெருமூச்செறிந்து புலம்பி அவ் வுருவின் பக்கத்தே சென்றாள். உடனே, ஆண்டுள்ள கந்திற்பாவைத் தெய்வம் 'நீ இவனபாற் செல்லாதே! செல்லாதே! இவன் உனக்குக் கணவனாகியதும் நீ இவனுக்கு மனைவியாகியதும் சென்ற பிறப்பில் மட்டுமன்று; அதற்கு முன்னும் எத்தனையோ பிறப்புக்களில் நிகழ்ந்தன. இங்ஙனம் தடுமாறி வரும் பிறவித்துன்பத்தை ஒழித்தற்கு முயல்கின்ற நீ இவன் இறந்தது பற்றி வருந்தாதே,' என்று தனது தெய்வமொழியிற் கூறிற்று.

அப்பால் மணிமேகலைக்குப் பின் நிகழ்வனவற்றையும் அக் கந்திற்பாவை உரைத்தது. அதுகேட்ட மணிமேகலை கவலையொழிந்து மயக்கம் நீங்கியிருந்தாள்; அவ்வளவிற் கதிரவன் தோன்றினான்.

கதிரவன் தோன்றியவுடன் கந்திற்பாவையையும் சம்பாபதியையும் வழிபட்டவர்கள் அங்கே உதயகுமரனுக்கு நேர்ந்ததனைச் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள முனிவர்கட்குக் கூறினார்கள். அம் முனிவர்கள் மணிமேகலையை நோக்கி, நீ இதனை அறிந்ததுண்டோ, என்று கேட்டனர். அவள் நிகழ்ந்தவற்றை உ,ரைக்க, அவர்கள் மன்னவன் மகன் உடலையும் மணிமேகலையையும் ஒரு தனியிடத்தில் ஒளித்துவைத்துவிட்டு, அரசன் கோயிலையடைந்து தம் வரவைக் காவலர் வழியாக அரசற்கு அறிவிக்க, அரசன் தன்னிடம் அவரை அழைத்து என்னென்று வினவ, "இவ்வூர் நாடகக்கணிகை குலத்தில் தோன்றிய மாதவியென்பாள், தன் கணவன் கோவலன் கொலையுண்டிறந்தது பொறாமல், உலகவாழ்வை வெறுத்து, முனிவர்களின் தவப்பள்ளியைச் சார்ந்தனள். அவள்பெற்ற மணிமேகலை