ஆராய்ச்சி முன்னுரை

வடிவம் பெற்றிருந்தேன்; என்னைப் பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறையில் அடைப்பித்தாய்: நான் ஊண்ஒழி மந்திரத்தால் அத் துன்பத்தினின்றும் தப்புதலுற்றேன். நீ சென்ற பிறப்பில் என் கணவனாக இருந்த இராகுலனுக்கு இப் பிறப்பில் ஈன்ற தாயாகலான், உன் துன்பங்களைந்து உன்னை நல்வழிப்படுத்த வெண்ணியே நான் வான்வழிச் செல்லலும் வேற்றுருக் கொள்ளலும் நினைந்திலேன். யான் கூறும் இன்னுரையைக் கேட்பாயாக.

"காமம், கொலை, கள், பொய், களவு என்னும் இவ் வைந்தும் பெருந்துன்பந் தருவனவாகலின், இவற்றை நீக்குதல் வேண்டும்; இவற்றை விட்டொழித்தோரே சீலமுடையோராவர்; செற்றத்தை அடக்கினாரே முற்றவுணர்ந்தவராவர்; வறியோர்க்கு இல்லாதவற்றை அளிப்பவரே வாழ்பவராவர்; வருந்திவந்தோரின் அரும்பசி களைந்தோரே மறுமையுலகை அறிந்தோராவர்; மன்பதைக்கெல்லாம் அன்பொழியாதவரே உண்மை உணர்ந்தோராவர்," என்று ஞானமாகிய நல்ல நீரினை இராசமா தேவியின் செவியகத்து வார்ப்ப, அவளது துயராகிய நெருப்பு அவிந்து மனந்தெளிந்து மணிமேகலையை வணங்கினள். அவள் வணங்குதல் தகாதெனக் கருதியே மணிமேகலை, 'நீ என் கணவனைப் பெற்ற தாயாதலன்றியும், அரசனுடைய மாபெருந் தேவியாகவும் உள்ளாய்; ஆதலால் என்னை வணங்குதல் தக்கதன்று,' என்று கூறித்தானும் அவளை அன்புடன் வணங்கினாள்.

உதயகுமரன் விஞ்சையன் வாளால் வெட்டுண்டு இறந்ததையும் மணிமேகலை சிறையில் வைக்கப்பட்டிருத்தலையும் கேட்டறிந்த சித்திராபதி வருந்தி நடுநடுங்கி, அவளைச் சிறையினின்றும் விடுவிக்க எண்ணி, அரசன் தேவிபாற் சென்று வணங்கி' 'மாபெருந்தேவி! கோவலன் இறந்தானென்று மாதவி தன் பரத்தமைத் தொழிலை விட்டுத் தவப்பள்ளியை அடைந்தாள்; அவள் மகளாகிய அரங்கக்கூத்தி பிச்சைப் பாத்திரமேந்தி, மனைதோறுஞ் சென்று ஐயமேற்கின்றாள். இச் செயல்களைக் கண்டு யாவரும் எள்ளி நகைக்கின்றனர். ஆதலால் மணிமேகலையை என் மனைக்கு வருமாறு கட்டளை இடுக,' என்றாள்.

அதற்கு இராசமாதேவி 'கள், பொய், கொலை. களவு, காமம் என்னும் இவ் வைந்தும் அறிஞரால் நீக்கப்பட்டவை. அவற்றையே கைக்கொண்டுள்ள உன் பரத்தமைத் தொழிலைக் கீழ்மையானது என்று வெறுத்து வந்த இவள், உன்னுடன் வந்து, உன் இல்லில், இருத்தற்குரியளல்லள். என்னுடனேயே இருத்தற்குரியள்,' என்று கூறிக்கொண்டிருக்குங்கால், மணிமேகலை நிலையைக் கேள்வியுற்ற மாதவி அதனைச் சுதமதிக்குக்கூறி வருந்தி அறவணவடிகள்பாற்சென்று அவரை வணங்கி அறிவித்து அவருடன் அவளை மீட்டற்கு இராசமாதேவியிடம் வர, இராசமாதேவி அவரைக் கண்டவுடன், மற்ற இருவருடன் எழுந்து எதிர் சென்று அவரடியை வணங்கினாள். அவர் 'அறிவுண்டாக,' என்று வாழ்த்துக் கூறினார். அப்பால், அவள் அவரை அருந்தவர்க்கென அமைந்த ஓர் தவிசில் இருத்தி அடிவிளக்கிச் சிறப்புச் செய்து, 'மிகப் பெரியாராகிய நும்மை இங்கெழுந்தருளச் செய்தது எம் நல்வினையே,' என்று பற்பல நயவுரை கூறி வாழ்த்தி வணங்கினாள். "பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார், இறந்தா ரென்கை இயல்பே," என உரைத்துப் பன்னிரு நிதானங்களையும் அவட்கு அருளிச்செய்து, மாதவிக்கும் சுதமதிக்கும் 'எப்பொழுதும் நல்லறத்தையே கேட்டு, அதன்வழி ஒழுகுமின்,' என்று கூறி, மணிமேகலையை நோக்கி, 'நீ மற்ற அறங்களைக்