ஆராய்ச்சி முன்னுரை

தன்மை பிறழாது உரைக்குந்திறம், கண்டு கண்டு இன்புறுதற் குரியது. பின்னரும் ஓர் பித்தன் (கிருக்கன்) இயல்பை,

அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
தொழூஉம் எழூஉம் சுழல்லுஞ் சுழலும்
ஓடலும் ஓடும் ஒருசிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன்"    (3:110-4)

என்று பித்துக்கொண்டோன் தன்மை சிறிதும் பிழையாது கண்ட கண்டவாறு படம்பிடித்ததுபோல அழுதலும் விழுதலும் அரற்றலும் கூவலும் தொழுதலும் எழுதலும் சுற்றலும் ஓடலும் முதலிய அவன் செயல்களை நாம் அகக்கண்ணிற் காணுமாறு ஒவியம்போற் காட்டியிருக்கும் செப்பம் வியப்பை யூட்டுவதாகும்.

பின்பு மணிமேகலை மலர் கொய்யச் சென்ற உவவனத்தின் காட்சியையும் அதன்கண் உள்ள பலவகை மலர் மரங்களையும் நாம் காணுமாறு விரித்துக்கூறி யிருக்குந்திறம், இன்புற்று வியத்தற் குரியது. அது,

குரவமும் மரவமும் குருந்துங் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்கியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம்"     (3:160-4)

என்பதாகும்.

இவைகளேயன்றி, மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதைக்கண் அந்திமாலைப் பொழுதை ஒரு பெண்ணாக உருவகஞ் செய்து,

குணதிசை மருங்கின் நாள்முதிர் மதியமும்
குடதிசை மருங்கிற் சென்றுவீழ் கதிரும்
வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக
எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற
அன்றிற் பேடை அரிக்குரல் அழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப்
பவளச் செங்காற் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கண் சேதா
முலைபொழி தீம்பால் எழுதுகள் அவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர
அந்தி யந்தணர் செந்தீப் பேணப்