ஆராய்ச்சி முன்னுரை

தபைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப
யாழோர் மருதத் தின்னரம் புளரக்
கோவலர் முல்லைக் குழல்மேற் கொள்ள
அமரக மருங்கின் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலைமெய் யாட்டி
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென்"  (5: 119-41)

என, அணிந்துரைத்தலால் அறியலாம். பின்னும் வரும் காதைகளிலெல்லாம் இயற்கைப்பொருள்களை அவைகளின் இயற்கை கனிய எடுத்து விளக்குவதால் கண்டு மகிழுந் தகையதாக அமைந்துள்ளமை காவியக்காதலர் காண்பாராக.

அறிவுரைகள்:

உதயகுமரன் மணிமேகலைபாற்கொண்ட காதல் மயக்கத்தால் அவள் தன்மையைச் சுதமதியிடங் கேட்டபோது, அவன் அறிவு திருந்த மக்கள் உடலின் தூய்தல்லாத தன்மையும் பிறவும் உணருமாறு எடுத்துக்காட்டிக் கூறுமிடத்து,

"இளமை நாணி முதுமை எய்தி
உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவுஞ் சால்பும் அரசியல் வழக்கும்
செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ
அனைய தாயினும் யானொன்று கிளப்பல்
வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி
வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது
மூத்து விளிவுடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையா றழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்"    (4:107-21.)

எனவும்,

இரவுப்பொழுது நீங்கின் மணிமேகலை தன் கையகப்படுவாள் என ஏங்கித் துயிலாது வருந்திக்கொண்டிருந்து உதயகுமரன்முன் மணிமேகலா தெயவந்தோன்றி அறவுரை கூறுவதாக, அத்தெய்வத்தின் வாய்மொழியாக அமைத்து,

".....................மன்னவன் மகனே!
கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதியின் றாகும்