பதிகம் - (கதை பொதி பாட்டு)

நல்லாள்தான் - மணிபல்லவத்தின்கண் மணிமேகலை, துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும்-உறக்கம் நீங்கித் தனியே துன்புற்று வருந்தியதும் ;

கண்டு அவன் எனப் பிரித்தலுமாம். மணிமேகலா தெய்வம்-இராக் கதரால் துன்பமுண்டாகாமல் இந்திரன் ஏவலால் சிலதீவுகளைக் காக்குந் தெய்வம் : கோவலனது குல தெய்வம். மணிமேகலை - கோவலனுக்கு நாடகக் கணிகையாகிய மாதவி வயிற்றிற்பிறந்தவள் ; இக்காப்பியத்தின் தலைவி. மணிபல்லவம் - காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கேயுள்ளதொரு சிறு தீவு. உவவனம் - உபவனம். எடுப்பியது - எழுப்பியது ; 1"உரவுநீர்ப் பரப்பி னூர்துயி லெடுப்பி" என்பதும் காண்க. தனித்துயர் - ஒப்பற்ற துயருமாம்.

49--58. உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளிமணிப் பீடிகை - அங்ஙனம் வருந்தினவள் அவ்விடத்தில் ஒளிமிக்க மணிகளானாய ஒரு பாத பீடிகையினால், பழம்பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்- முற்பிறப்பு நிகழ்ச்சியை யெல்லாம் முறையால் அறிந்ததும், உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனங்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும்-அங்ஙனம் அறிந்த மணிமேகலை முன் மணிமேகலா தெய்வம் வெளிப்பட்டு மனம் கவலுதல் ஒழிகவென்று கூறி மந்திரம் அருளியதும், தீப திலகை செவ்வனம் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும் - தீவதிலகை என்பாள் நன்கு வெளிப்பட்டுப் பெருமை பொருந்திய பாத்திரத்தினை மணிமேகலைக்குக் கொடுத்ததும், பாத்திரம்பெற்ற பைந்தொடி தாயரொடு - அப் பாத்திரத்தினைப்பெற்ற மெல்லியல் தன் தாயராகிய மாதவி சுதமதி என்னும் இருவருடனும், யாப்புறு மாதவத்து அறவணர்த் தொழுததும் - கட்டமைந்த பெருந்தவமுடைய அறவணவடிகளை வணங்கியதும், அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் - அறவண முனிவர் ஆபுத்திரன் வரலாற்றினை, நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் - நறிய மலர்மாலை போலும் நங்கைக்கு நன்கு மொழிந்ததும் ;

கவல் - கவலுதல் : முதனிலைத் தொழிற் பெயர். ஒழிகென-ஒழிக என : அகரந் தொக்கது. மந்திரம் - வேற்றுரு அடைவிப்பதும், விசும்பிலே திரியச் செய்வதும், பசியைப் போக்குவதுமாகிய மந்திரங்கள். தீப திலகை - தீவுக்குத் திலகம் போன்றவள் ; மணிபல்லவத்திலே புத்தன் பாத பீடிகையை இந்திரன் ஏவலாற் காவல் செய்பவள் இவள். மாபெரும் பாத்திரம்-அமுதசுரபி எனப் பெயரிய பிச்சைப் பாத்திரம். தாயர் - மாதவியும் அவள் தோழியாகிய சுதமதியும் ; இக்காப்பியத்திற்பிறாண்டும் இவ்விருவரும் மணிமேகலையின் தாயரென வழங்கப்பெறுவர். யாப்பு - கட்டு ; உறுதி. அறவணர் - ஒரு புத்த முனிவர்.


1 சிலப். 4 : 79.