பதிகம் - (கதை பொதி பாட்டு)

வண்ணமும் - வலிபொருந்திய வாளினால் வஞ்சங்கொண்ட அவ் விஞ்சையன் அரசிளம் புதல்வனை வீழ்த்திய வண்ணமும், ஐயரி யுண்கண் அவன் துயர் பொறாஅள் தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும் - அழகிய அரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய மணிமேகலை முற்பிறப்பிற் கணவனாயிருந்த மன்னிளம் புதல்வன் இறந்த துக்கத்தினைப் பொறுக்க இயலாதவளாய்த் தெய்வத்தின் மொழியால் தேறிய வண்ணமும் ;

விஞ்சையன் மகள் - விஞ்சையன் மனைவி ; 1"நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம், மனக்கினி யாற்குநீ மகளாயதூஉம்" என்றவிடத்து மகன், மகள் என்பன முறையே கணவன், மனைவி என்ற பொருளில் வந்திருத்தல் காண்க. கருத்து நோக்கி வஞ்சித்துச் சென்றஎன்றுரைக்கப்பட்டது. மன்னவன்சிறுவன் ஆயிழையை அகலா தணுகலும் அவனை என்றியைக்க. வஞ்ச விஞ்சையன் : சுட்டு. உண்கண் : ஆகு பெயர். தெய்வம் - கந்திற் பாவை.

79--90. அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச் சிறை செய்கென்றதும் - ஒலிக்கின்ற வீரக்கழலினை யணிந்த மன்னவன் மணிமேகலையைச் சிறைப்படுத்தியதும், சிறைவீடு செய்ததும் - பின் சிறையினின்று விடுவித்ததும், நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்து ஆங்கு - இராசமாதேவிக்குப் புத்த தருமங்களை ஆண்டு எடுத்துரைத்து, ஆய்வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்-மணிமேகலை ஆபுத்திரனுடைய நாட்டினை அடைந்ததும், ஆங்கவன் தன்னோடு அணியிழை போகி-சிறுமுதுக்குறைவி ஆபுத்திரனோடு சென்று, ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்-பெருமையுடைய மணி பல்லவத்தின்கண் சேர்ந்ததும், உற்றவள் ஆங்கோர் உயர் தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்-மணிபல்லவமடைந்த மணிமேகலை ஆங்கு ஒரு பெரிய தவத்தினன் வடிவத்தோடு அழகிய கொடிகளையுடைய வஞ்சி நகரத்திற் சேர்ந்தவாறும், நவை அறு நன்பொருள் உரைமினோ எனச் சமயக் கணக்கர் தந்திறம் கேட்டதும்-குற்றமற்ற நல்ல தத்துவங்களைக் கூறுவீர் என வினாவிச் சமய வாதியர் கூறிய திறங்களைக் கேட்டதும், ஆங்குஅத் தாயரோடு அறவணர்த்தேர்த்து பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் - அங்கே மணிமேகலை தன் தாயருடன் அறவணவடிகளைத் தேடிக் காஞ்சிமாநகரத்தை அடைந்ததும்

வேந்தன் - மாவண்கிள்ளி : உதயகுமரன் தந்தை. செய்கென்றது : அகரந் தொக்கது. அரசன் ஏவும் வினைமுதலாகலின் சிறை செய்ததனைச் சிறை செய்கென்றான் என்றார். வீடு-விடுதல் : முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆங்கவன் : ஒரு சொல். வஞ்சி - சேர மன்னர்களின் தலைநகர். நன்பொருள் - தத்துவம் : நன்மையென்பதன் ஈறுகெட்டது-


1 மணி. 21 : 29-30.