பதிகம் - (கதை பொதி பாட்டு)

உரைமினோ, ஓ; இசைநிறை. சமயக் கணக்கர்-சமய வாதியர்; 1"சமயக் கணக்கர் மதிவழி கூறாது", "சமயக்கணக்கர் தந்திறங்கடந்து" என்பர் பிற சான்றோரும். திறம்-இயல்பு, கொள்கை. ஆங்கு-வஞ்சிப்பதியில்; வஞ்சியில் தேர்ந்துபின் கச்சி புக்கதுமென்க; தாயரையும் அறவணரையும் தேர்ந்தென்க. 2"இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்" என்னும் விதியால் அறவணர்த் தேர்ந்து என வலி மிக்கது.

91--8. புக்கவள் கொண்ட பொய்யுருக் களைந்து - கச்சியிற் புகுந்த மணிமேகலை தான் கொண்ட பொய் வேடத்தினை நீக்கி, மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் - அவருடைய அடிகளை வணக்கஞ் செய்தவாறும், தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு பவத்திறம் அறுக எனப் பாவை நோற்றதும் - தவநெறி பூண்டு அறவுரை கேட்டுப் பிறவியொழிக என்று மணிமேகலை தவம் புரிந்ததும் ஆகியவற்றை, இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப - இளங்கோவடிகள் கேட்டருள், வளங்கெழு கூலவாணிகன் சாத்தன் - வளப்பமிக்க கூலவாணிகனாகிய சாத்தன் என்னும் நல்லிசைப் புலவன், மாவண் தமிழ்த்திறம் மனிமேகலை துறவு ஆறைம்பாட்டினுள் அறிய வைத்தனன் என்-பெருமை மிக்க தமிழிலக்கண நெறியால் மணிமேகலை துறவு என்னுந் தொடர்நிலைச் செய்யுளை முப்பது பாட்டினுள்ளே யாவரும் அறியுமாறு செய்து வைத்தனன் என்க.

மற்றவர் : மற்று, அசை, அவர் - அறவணர். தருமம் - புத்த தருமம். மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் என்பதனை நெகிழ விடுத்தும், கேட்டு நோற்றதும் என்பதைக் கேட்டதும் நோற்றதும், என இரண்டாகக் கொண்டும் ஈற்றிலுள்ள இரு காதைகளின் பெயரை முன்னர் யாரோ திரித்து அமைத்துள்ளனர். உம்மை கொடுத்து எண்ணியவற்றுள் ஒன்றை விடுத்தலும் ஒன்றைப் பகுத்தலும் கூடாமையானும், இறுதிக் காதையின் ஈற்றிலும் "தவத்திறம்...பாவை நோற்றனளென்" எனக் கேட்டு நோற்றமை ஒன்றாக உரைத்திருத்தலானும் அங்ஙனம் அமைத்தல் பொருந்தா தென்க. இளங்கோ வேந்தன் - இளங்கோவாகிய வேந்தன்; இளங்கோவடிகள்: இவர் சேரன் செங்குட்டுவனுக்குத் தம்பி; துறவு பூண்டவர்; சிலப்பதிகாரம் இயற்றியவர். அருளிக்கேட்ப-அருள்செய்து கேட்ப என்றுமாம். வளங்கெழு கூலமென்க. கூலம்-நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்னும் எண்வகைத் தானியமாம். கூலம் பதினெட்டென்பர் கூத்த நூலார். சாத்தனார் கூலவாணிகன் சாத்தனார் எனவும் சீத்தலைச் சாத்தனார் எனவும் கூறப்படுவர். இக்காப்பியத்திற்கு மணிமேகலை துறவு என்னும் பெயருண்மை இதனாற் பெற்றாம். நோற்றது ஈறாகவுள்ளவற்றை அறிய வைத்தனன் என்க. என்: அசை.

பதிகம் முற்றிற்று.


1 கல். 17: 65. 2 தொல், தொகை: 15.