தோன்றுதற்குக் காரணமாயிருந்த இவ்விருட்
காலத்தே தான் இப்பெருங்கதை முதலிய நூல்கள் பேணப்படாது அக்காலத்தார் நிலையை நமக்கு அறிவுறுத்துவன போன்று சீர் குலைந்து நிலை குலைந்து அழிந்தும்
கெட்டும் போயின. அவ் விருட் காலத்தும் அழியாதெஞ்சி இற்றைநாள் நமக்குக்
கிடைத்துள்ள இப் பெருங்கதை நூலில் ஐந்து காண்டங்கள் உள்ளன. அவற்றுள்ளும்
முதலில் உள்ள உஞ்சைக் காண்டத்தில் முப் பத்தொரு முழுக்காதைகளும்,
முப்பத்தி இரண்டாம் காதையில் முற்பகுதியும், மகத காண்டத்துப் பதினோராங் காதை முழுதும், 12ஆம் காதை 17ஆங் காதைகளின் முற்பகுதிகளும் 10ஆம் 19ஆங்
காதைகளின் பிற்பகுதிகளும், நரவாண காண்டத்தின் கண் 8ஆங் காதைக்கு பின்புள்ள
பகுதியும் காதைகளும் அழிந்தொழிந்தன. இப்பெருங் கதையின் இறுதியில் துறவுக்
காண்டம் என்று ஒரு காண்டம் இருந்து அழிந்திருத்தல் வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
இனி,
''செய்கை அழிந்து சிதன்மண்டிற்
றாயினும் பெய்யா ஒருசிறை பேரில்உடைத் தாகும்''
என்ற நாலடியின் கூற்றிற் கிணங்க
இங்ஙனம் சிதைந் தொழிந்த விடத்தும் இப்பெருங்கதை செந்தமிழின்பம்
நுகர்வார்க்கு அவர் விரும்புவன எல்லாந் தரும் திறமுடையதாகவே இன்றும்
திகழ்கின்றது.
இனி, ''சிறந்த இலக்கியம் வெறும்
பூம்பொழில் போல்வது மட்டும் அமையாது; அஃது இன்சுவைத் தீங்கனி நல்கும் பழு
மரத் தோட்டம் போன்றும் அமைதல் வேண்டும,'' என்று மேலை நாட்டு வித்தகர்
ஒருவர் கூறியிருந்ததனை யாம் ஓதியதுண்டு. அஃதிப்பொழுது எம் நினைவில்
எழுகின்றது..
|