இப் பெரியார் இதனால் நமக்கு
உணர்த்துவதாவது:-- சிறந்த இலக்கியம் வெறும் எதுகை
மோனை அடுக்கு முதலிய சொல் அழகும் உவமை முதலிய அணியழகும் இசை யழகும் உடையனவாக மட்டும் இருத்தல் போதியதாகாது. மக்களுக்கே சிறந்த பேறுகளாகிய உறுதிப் பொருள்களையும் அவை அழகிய முறையில் ஊட்டி உயிர்க்கு ஆக்கம் அளிப்பன
வாகவும் இருத்தல் வேண்டும்
என்பதாம்.
''அறம் பொருள் இன்பம் வீடு அடைதல்
நூற்பயனே''
என்பதும்,
''கற்றதனால் ஆய பயனென்கொல்
வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்''
என்பதும் நந்தமிழ்ச் சான்றோர் அமிழ்த மொழிகள்
ஆகும்.
இக் காப்பிய மெல்லாம் சமயச்
சார்புடையன எனினும், பண்டைக் காலந்தொட்டுப் பண்பட்டு வந்த நமது தமிழ் பண்
பாட்டினைத் தம் உயிராகப் போற்றித் தம்மகத்தே பொதிந்து கொண்டிருத்தலை
அறிகின்றோம். இக்காலமே நமது பண்டைய இலக்கிய முறைமை முற்றுப் பெற்ற
காலமும் ஆகும்.
இனி, இம் மறுமலர்ச்சிக் காலத்தே
தோன்றிய இப் பெருங் காப்பியமெல்லாம் பண்டைத் தமிழ்ப் பண்பாட்டினைத்
தம்முயிராகக் கொண்டமையாலே தான் அந் நூல்கள் மேற் கொண்ட சமய நெறிகள் தளர்ந்திளைத்த காலத்தும், இவற்றின் சுவையுணர்ந்த நந்தமிழ்சசான்றோராற் பெரிதும் போற்றிக் கொள்ளப்பட்டன; இன்னும் இவை நந்தமிழ்மொழி உளதாகும் காலமெல்லாம் தமிழ் மக்களாற் போற்றவேபடும் என்பது உறுதி.
|