பெருங்கதை என்னும் இப்பெருங் காப்பியத்
தலைவனாகிய உதயண குமரனின் தேவியராகிய வாசவதத்தையும், பதுமாபதியும், ஒருநாள்
தம் தோழியரை இருகூறாகப் பிரித்துப் பந்தாடும்படி செய்து மகிழ்வாராயினர். அம்மகளிர் ஆடலை ஆடவர் காணுதல் மரபன்று. எனவே, அவ்வாடலைக் காண வேணவாக்
கொண்ட உதயண வேந்தன் பெண்வேடங் கொண்டு ஒரு பிடியிலேறிச் சென்று அம் மகளிர்
பந்தாடும் அழகினைக் கண்டு களிகூர்ந்தான். கோப்பெருந் தேவியர் இருவருடைய தோழியரும் கண்டோர் வியக்கும்படி திறம்பட ஆடா நின்றனர், திறம்பட
ஆடியவருள்ளும் தலை சிறப்ப 'மானனீகை' என்னும் ஒரு தோழி அனைவருடைய பாராட்டினையும் பெற்றாள். இவளுடைய பந்தாட்டத்தினைக் கண்ட உதயணன் பெரிதும் வியந்தான்;
மேலும் அம்மானனீகையின் பேரழகும் அக்கலையழகோடு கலந்து விடவே, அவ்வேந்தன்
அவள்பால் கட்டுக் கடங்காத காமவேட்கை உடையனாயினான். பந்தாட்டம் முடிந்த
பின்னர் உதயணகுமரன் தன் மாளிகைக்குச் சென்று காமத்தால்
தவித்துக்கொண்டிருந்தான். மானனீகை என்பவள் வாசவதத்தையின்
ஒப்பனைமகள் என்பதும், அவளே எப்பொழுதும் வாசவதத்தைக்கு
அணிசெய்கின்றாள் என்பதும் அவள் யவன மொழியும் கற்றிருக்கின்றாள் என்பதும்
உதயணன் பிறரை வினாவித் தெரிந்துகொண்டான். அவ்விரவு தன் மாளிகைக்கு வந்த
வாசவதத்தையைக் கூர்ந்து நோக்கித் ''தேவி! நினக்கு ஒப்பனை செய்தவர் யார்?
இவ்வொப்பனை உன் இயற்கை யழகைக் கெடுக்கின்றது. யானே நின் அழகிற் கேற்ப அணிவன்காண்'' என்று கூறி அவ் வொப்பனைகளைக் கலைத்துவிட்டுப் பூந்தாதினைச் சந்தனத்தோடு குழைத்து முல்லையரும்பாகிய எழுதுகோலிற் தோய்த்து அவ்வாசவதத்தைக்குக் கோலஞ் செய்வான் போன்று, யவன மொழியாலே
வாசவதத்தையின் நெற்றியில் ஒரு திருமுகம் வரைந்து மானனீகையின்பால்
விடுத்தான்.
|