முன்னுரை
 

இனி இங்ஙனமே இப்பெருங்கதையின் யாண்டும் வருகின்ற நில முதலியவற்றின் வருணனைகளைக் கண்டின்புறலாம்.

இனி, இப்பெருங்காப்பியத் தலைவனாகிய உதயணகுமரன்
 

''இளமையும் வனப்பும் இல்லொடு வரவும்
 வளமையும் தறுகணும் வரம்பில் கல்வியும்
 தேசத் தமைதியும் மாசில் சூழ்ச்சியொடு
 எண் வகை''

(1. 36 : 89-92)


பண்பும் உடையனாய் அப்பெருந்தன்மைக்கேற்ற சொற் செயலுடையனாய்ச் சிறந்து இந்நூலை ஓதுவோர் உளத்தே தொழுதகு தெய்வமாய்த் தோன்றி இன்புறுத்துகின்றான்.

இங்ஙனமே ! இத்தலைவனுக்கு எவ்வாற்றானும் ஒப்பவளாகிய வாசவதத்தையோ,

''ஒண்மையும் நிறையும் ஓங்கிய ஒளியும்
 பெண்மையும் பெருமையும் .........
 நிலம்புடை பெயரினும் விசும்புவந் திழியினும்
 கலங்காக் கடவுள் கற்பும்...........
 உடையளாய் இக் குணநலங்களோடே,
 ''யாற்றறல் அன்ன கூந்தல் யாற்றுச்
 சுழியெனக் கிடந்த குழிநவில் கொப்பூழ்
 வில்லெனக் கிடந்த புருவம் வில்லின்
 அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண்
 பிறையெனச் சுடரும் சிறுநுதல் பிறையின்
 நிறையெனத் தோன்றும் கறைபயில் வாண்முகம்
 கிளியென மிழற்றும் கிளவி கிளியின்
 ஒளிபெறு வாயின் அன்ன ஒள்ளுகிர்
 வேயெனத் திரண்ட மென்தோள் வேயின்
 விளங்குமுத் தன்ன துளங்கொளி முறுவல்
 காந்தண் முகிழன்ன மெல்விரல் காந்தள்
 பூந்துடுப் பன்ன புனைவளை முன்கை
 அன்னத் தன்ன மென்னடை அன்னத்துப்
 புணர்வின் அன்ன தண்டாக் காதல்
 அணிக்கவின் கொண்ட அதிநாக ரிகத்து

(4. 11: 64 - 82.)

உயிர் ஓவியமாய் இப்பெருங்கதையினைக் கற்றோர் நினைவிலே என்றென்று நின்று நிலவுவதொரு பத்தினிக் கடவுளாகக் காணப்படுகின்றாள்.

இங்ஙனமே சான்றாண்மைக்கே ஓர் எடுத்துக்காட்டாக இக்கதையில் வரும் சாங்கியத்தாய் என்னும் தவமூ தாட்டியின் சொற்களும் செயல்களும் நம் சிந்தைக்குத் தெவிட்டாத இன்ன முதமாகின்றன. இன்னும் காஞசனமாலையும் யூகி முதலிய அமைச்சரும் பிறருமாய் இக்காப்பியத்திற் காணப்படும் உறுப்பினரெல்லாம் ஒவ்வொரு வகையில் நம்மனோர்க் கின்பம் நல்கும் வள்ளலாகவே திகழ்கின்றனர்.