முகப்பு
 
தொடக்கம்

ix

வப்பச்சொன்னான்” என ஒருசெய்யுள் வில்லிபுத்தூரார்பாரதத்து ஏட்டுப்பிரதி
சிலவற்றில் வரந்தருவார் பாடிய சிறப்புப்பாயிரத்தினிறுதியிற் காணப்படுகின்றது:
இது, பழைய  பாடலாக இருக்குமாயின், இதிற்கூறிய ஆறாயிரம் பாடல்களில்
பத்துப்பருவங்களாகவுள்ள நாலாயிரத்துமுந்நூற்றுச்சில்லறைபோக, மற்றவை
இவர் பாடிய எட்டுப்பருவங்களெனக் கொள்ளலாம்.

வில்லிபுத்தூரார் பாடியபாரதத்திலே சுருக்கமாகக் கதையைக் தொகுத்துக்
கூறும் முந்நூறு நானூறு பாடல்கள் தவிர மற்றை நாலாயிரஞ் செய்யுட்களை
யெடுத்துக்கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை யென்பவர், புதிதாகத் தாம்
பதினோராயிரம் பாடல் பாடி இடையிடையிற் கோத்தும், இறுதியிற் சேர்த்தும்
பாரதம் பதினெட்டுப்பருவங்களையும் பூர்த்திசெய்தார்; அது ‘நல்லாப் பிள்ளை
பாரதம்’ என வழங்கும்: அந்நூலாசிரியர், இற்றைக்கு நூற்று நாற்பத்தைந்து
வருடங்கட்குமுன் இருந்தவர். இது தவிர, இற்றைக்கு, 190 வருடங்களின்முன்
இருந்த அஷ்டாவதானம் - அரங்கநாதகவிராயர் பாடியபாரதத்தின்
பிற்பகுதியும்ஒன்று உளது; அது, ஏறக்குறைய 2500 செய்யுட்களையுடையது.
இனி, மாவிந்தம் என்னும் பெயரால் தமிழில் பாரதக் கதையைச்சொல்லும் ஒரு
நூலுண்டு என்றும் கூறுப: மற்றும், பழையகாஞ்சிப்புராண ஆசிரியர் ஒரு
பாரதத்தை இயற்றியுள்ளாரென்று அப்புராணச் சிறப்புப்பாயிரம் தெரிவிக்கின்ற
தென்றும் அந்நூல் இப்போது கிடைக்கவில்லையென்றும் கூறுப.

இவர்மகாபாரதமொன்றுதவிர வேறுநூலெதுவும் பாடியிருப்பதாகத்
தெரியவில்லை.

இவர் தமது நூலிற் பெரும்பாலும் வடமொழிகளைத் தனி மொழியாகவும்
தொடர்மொழியாகவும் இன்னமொழியின் சம்பந்தமானதென்று எளிதில்
தெரியவொண்ணாதபடி திரித்தும் மொழிபெயர்த்தும் உபயோகித்திருக்கின்றனர்.
தமிழில் எந்தநூலாசிரியரும் வடமொழிகளை இவரளவு எடுத்துக்
கொள்ளவில்லை. வடசொற்களைத் தமிழ்க்காப்பியத்தில் நுழைக்கிற வழக்கம்
இவர் காலந்தொடங்கித்தான் அதிகமாயிருத்தல்வேண்டும். இவர் பாடல்களில்
- உவமை, உருவகம், எடுத்துக்காட்டுவமை, தற்குறிப்பேற்றம், வேற்றுப்
பொருள்வைப்பு, பிறதுமொழிதல், உயர்வுநவிற்சி முதலிய பொருளணிகள்
அமைந்திருப்பது மாத்திரமேயன்றி, மடக்கு [யமகம்], பிராசம் முதலிய
சொல்லணிகளும் ஆங்காங்கு அமைந்திருத்தலையும், இவரது செய்யுள்நடை
பலவிடத்தும் முடுகுடையதாதலையும் பலவகைச்சந்தங்கள் சந்தப்போலிகள்
வண்ணங்கள் பொருந்தியிருத்தலையும், யுத்தவருணனை எல்லா நூல்களினும்
இந்நூலிற் சிறந்திருத்தலையும் காணலாம்.


முன் பக்கம்