முகப்பு
 
தொடக்கம்
நூலாசிரியர் குமாரர் வரந்தருவார்
பாடிய

*சிறப்புப்பாயிரம்.

1. பொருப்பிலேபிறந் துதென்னன் புகழிலேகிடந் துசங்கத்து
இருப்பிலேயிருந் துவைகையேட்டி லேதவழ்ந்த பேதை
நெருப்பிலேநின் றுகற்றோர்நினைவிலேநடந் தோரேன
மருப்பிலேபயின் றபாவைமருங் கிலேவளருகின்றாள்.
 
2.அகத்தியன் பயந்தசெஞ்சொ லாரணங்கம்புசாதன்
முகத்தினில் வாழுமந்தமொய் குழலருளினாலே
பகைத் தெதிர்பொருததெய்வப் பாரதகதையிம்முந்நீர்ச்
செகத்தினில் விருத்தயாப்பாற் செய்கெனச் செய்தன்றே.

* சிறப்புப்பாயிரம் என்பது - ஒரு நூலுக்கே சிறப்பாக அமைந்துள்ள
பாயிரமென்க."ஆக்கியோன்பெயரே வழியேயெல்லை, நூற் பெயர்யாப்பே
நுதலிய பொருளே,கேட்போர்பயனோடாயெண் பொருளும், வாய்ப்பக்காட்டல்
பாயிரத்தியல்பே,""காலங்களனே காரணமென்றிம், மூவகையேற்றி
மொழிநருமுளரே" என்றதனால்,பாயிரத்திற் கூறப்படுவன - இவையென அறிக.
இந்தச்சிறப்புப் பாயிரத்திற் கூறப்படுவன- பாடினார் இன்னாரென்பதும், பாடக்
காரணமு மாகும்.

1. பேதை பாவைமருங்கிலே வளருகின்றாளென்க. ஓரேன மருப்பிலே
பயின்றபாவையென்றது - பூமிதேவியை. வராகாவதாரஞ் செய்த திருமால்
தன்கோட்டிலே பூமியை யேந்தியமை, புராணப் பிரசித்தம். பேதையென்பது -
தமிழணங்காகிய குழந்தையை. பேதை - குழந்தைப்பருவம்: அப்பருவத்துக்கு
வயதுஎல்லை - ஐந்து வயதுமுதல் ஏழுவயசுவரையிலும். தமிழைப் பேதையென்றதற்குஏற்ப, பிறவி முதலியனகூறினார். பொருப்பு - அகத்தியரின்
வாழிடமான பொதியமலை.பாண்டியரே தமிழ்வளர்த்தோ ராதலால், அவர்புகழிலே
தமிழ்ப்பேதை கிடப்பாளென்க.மதுரையில் சங்கத்தாரால் தமிழ்மொழி
வளர்க்கப்பட்டு வளர்ந்ததனால்'சங்கத்திருப்பிலேயிருந்து' என்றது.
திருஞானசம்பந்தர் சமணருடன் வாது நிகழ்த்திப்புனல் வாதத்தில் அச்சமணரை
வெல்லுமாறு "வாழ்கவந்தணர்" என்ற பாசுரத்தைஓலையிலெழுதி நட்டாற்றில்
விட்டபோது அவ்வேடு கரையெதிரேறி வந்தது என்றசரித்திரத்தையுட்கொண்டு,'
வைகையேட்டிலே தவழ்ந்த' என்றது. அங்ஙனமேநள்ளாற்றுப்பதிகம் எழுதிய
ஏட்டை நெருப்பிலேயிட, அப்பதிகம் வேவாதுகிடந்ததென்ற வரலாறுபற்றி,
'நெருப்பிலே நின்று' என்றது. கற்றோர் அத்தமிழ்மொழியைப்பயின்று வருதலால்
'கற்றோர்நினைவிலேநடந்து' என்றது.

2. அம்புசாதம் - தாமரை: அதில்தோன்றியவன் - அம்புசாதன்.
அம்புயாதன் என்று பாடம் ஓதுவாருமுளர். முகம் - ஈண்டு, முகத்திலுள்ள நா:
"கலைமகள்வாழ்க்கைமுகத்ததெனினு, மலரவன்" என்றதும் காண்க. மொய்குழல்
என்றது சரசுவதியை.பெரும்பான்மைபற்றி, விருத்தயாப்பு என்றது. பாரதகதை
செய்கெனச் செய்ததுஎன்பதை, மேலே விளக்குவர்.


முன் பக்கம்