இவ்வாறே எத்தனை மன்னரைக் காட்டுகின்றனரோ, அத்தனை வேறுபட்ட சந்தம் அமைத்திருக்கின்றார். இம் முறையே யமைத்திருப்பது சந்தக்கவி பாடுவதில் வல்லவர் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அச் சந்தக் கவிகளுள் மற்றுமொரு புதுமையும் காணலாம்.

சிந்து நாடனைக் குறிக்குஞ் செய்யுளில் 'அரிசிந்து, விரிசிந்து, பொரிசிந்த, வரிசிந்த, என நான்கடியினும் சிந்து, சிந்த என்ற சொல்லமையுமாறு எடுத்து, நடுவிலும் பலவிடங்களிற் 'சிந்து' என்ற சொல் நிறுத்தி, 'வரிசிந்த, மகரந்த மலர்சிந்த வருசிந்து வளநாடனே' என ஈற்றடியை முடித்திருக்கும் ஏற்றங்கண்டால் எவரும் வியவாதிரார். அங்கநாடனைக் கூறுவதும் அவ்வாறே. 'சுரரங்க, நரரங்க, பரரங்க, வரரங்க' என 'அங்க' என்ற சொல் எதுகையிலும் இடையிலும் வரும்படி எடுத்துப் பாடியுள்ளார். மச்சநாடனைக் காட்டுவதும் அவ்வாறே யமைந்துள்ளது காண்க. 'அதிபார தனரூப' என்ற கவி முதல் 'வாடிவிழு நூலுமிரு' என்ற கவிவரை 17 கவிகளையும் படித்துக் காண்க. "ஆசுவல வர்க்குவண்ணம் புலியாமற் றெல்லாம், புலவர்க்கும் வெண்பாப் புலி" என்று ஆசுகவி பாடவல்லவர்க்கு வண்ணம் பாடுவது இயலாது; புன்புலவர்கட்கெல்லாம் வெண்பாப் பாட வியலாது என்ற இயற்கைக்கு மாறாக, இந் நூலாசிரியர் 'ஆசுகவி ராசர்' எனப் பேர்பெற்றும், சந்தக்கவியும் தடையின்றிப் பாடியிருப்பது பாவலராற் பாராட்டற்பாலதே. இப் புராணத்தில் எங்கணும் சந்தக்கவிகளே மிகுந்து காணப்படுகின்றன. இந்திர காண்டத்தில் முதல் இருபத்தைந்து பாடல்களுஞ் சந்தமே. வேட்டஞ்செய் காண்டத்தில் 7 முல் 39 வரை சந்தம்; பின்னும் 61 முதல் 78 வரையும் சந்தம்; காசி காண்டத்தில் 17 முதல் 31 வரை சந்தம்; மயான காண்டத்தில் சந்திரமதி புலம்பும் இடம் சந்தம்; சந்திரமதியைக் கொலைக் களத்திற்குக் கொண்டுபோவது கண்டு காசிநகரத்தார் பலவாறு தத்தம் கருத்தைக் கூறும் இடம் சந்தம் அமைந்திருப்பன காண்க. இதுபோன்ற சிறு காப்பியங்களில் இங்ஙனம் சந்தம் அமைந்திருப்பன காண்பதரிது. சுயம்வரத்திற்குப் பின்னர் திருமணம் நிகழ்ந்தது எனக் கூறிப் பின் கணவன் மனைவியர் புணர்ச்சி கூறுவது இலக்கிய மரபாயிருப்ப, இவ்வாசிரியர், சந்திரமதி மன்றல் மாலையை வானில் எறிந்தாள்; அது அரிச்சந்திரன் மார்பில் விழுந்தது; உடனே மன்னரெல்லாரும் வாடிக் கலங்கி வாயிலின் வெளியிற் சென்றனர்; அவையின்கண் அமர்ந்திருந்த ஆடவர் மங்கையர் பலரும் ஆரவாரஞ் செய்தனர் என்று கூறி, உடனே 'வல்லியு மன்னனும் மாளிகை புகுந்தார்'. 'பொன்னின்முலைக் கொடியோடு புணர்ந்தான்' என்று கூறியிருப்பது புதுமையினும் புதுமையாம். மறையோர் வந்து, தீத்தெய்வம் சான்றாகப் பல சடங்குகள் நடத்தினர் என்று கூறுவதை வெறுத்து விடுத்தனர் போலும். மணமாலையைச் சூட்டியவுடனே மணவாளர் இருவரும் கூடலுக்கு மாளி கையுட் செல்லவேண்டுவதான் முறை என்பது அவர் கருத்துப்போலும். மணவினையை விரித்துரைக்க அவர்க்கு மனவிருப்பமில்லை யென்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டு முறையைத் தழுவினர் எனவும் கொள்ளலாம். வீரகவிராசர் கற்பனைக்கவி புனைதலினும் வல்லவர் எனத் தெரிகிறது. அரிச்சந்திரன் சந்திரமதிக்குப் பூஞ்சோலை வளமும் பொய்கை வளமும் காட்டுகின்றான். பொய்கையில் ஒருத்தி நீரில் மூழ்குகின்றாள்; அவள் நீலோற்பல மலரை மூக்கில் வைத்து மணம் முகர்ந்து பார்க்கின்றாள்; ஆசிரியர் அச் செயலைக் கற்பிக்கிறார் : "இவள் நீலோற்பல மலரை மூக்கில் வைப்பது, இரு விழிக்கும் பகையாக நான் இருக்கின்றேன்; என்னை உன் நண்பராகிய விழியாரிடம் கூறி, இணக்கமாக நட்புடன் இருக்கச்செய்' என்று நீலோற்பலம் மூக்கின்பாற் சென்று கூறுவதுபோல இருக்கிறது" என்று அரிச்சந்திரன் கூறுவதாக அமைத்திருக்கின்றார்! புதிய கற்பனையன்றோ இது! உலகில் ஒருவரிடம் பகையாயிருப்பவர்கள் அவர்களுக்குத் துணையாகப் பக்கத்தில் இருப்பவரிடம் கூறி, உடன்படுத்தும்படி வேண்டுவது உலகியற்கைதானே! அவ் வியற்கையை யறிந்து இக் கற்பனையை யமைத்தது அறிவாற்றலைக் காட்டுகின்ற தன்றோ! இதுபோன்ற பல கற்பனைகளும் இந் நூலிற் பரக்கக் காணலாம். உலகம் பலவாறு கூறும் நல்லவனைக் கெட்டவன் எனவும், கெட்டவனை நல்லவன் எனவும், நல்வினையைத் தீவினையாகவும், தீவினையை நல்வினையாகவும் கூறும் இயல்பு மக்களிடம் அமைந்துள்ளது. இதுதான் உலகியல்பு என்பதை எல்லார்க்கும் விளக்குவார்போலச் சந்திரமதியைக் கொலைக்களம் கொண்டுசெல்லும் போது, அந் நகரத்தார் கூற்றாக மாற்றி மாற்றி அமைத்திருக்கும் முறையைக் காணுங்கள்!

"கையே செழுங்கமலம்" என்ற கவி முதல் தொடங்குகிறது; "'இத்துணை எழில் வாய்ந்த பெண்ணுக்கு, ஐயோ! இளமையில் கொலைத்தண்டனை வந்ததே! வரலாமா?' என்றார் சிலர்; 'இத்தகைய இளமையும் எழிலும் வாய்ந்த இவளைக் கொலை செய்வதற்கு இழிந்த புலையன் கையிலா கொடுக்கவேண்டும் நம்மரசன்?' என்றார் சிலர், 'இவனைப் புலையனென்று சொல்லலாமா? இவன் மார்பும் புயமும் பாருங்கள்! திருமால்போலவும் முருகன்போலவும் காமன்போலவும் காட்சியளிக்கின்றான்!' என்றார் சிலர்; 'இப் புலையன்தான் சிலநாட்களுக்கு முன் இவளை விலை கூறி விற்றான் ஒரு மறையோனுக்கு! இவனை யொருவன் வீரவாகு என்ற புலையனுக்கு விற்றான்! என்ன காரணமோ தெரியாது; பலநாட்கள் ஆயின! நம்மரசன் மகனைக் கொன்றுவிட்டாள்போலும்! அதனால் இவட்குத் தண்டனை கிடைத்தது