நீழலிலமர்ந்து விலங்கினங்களும்
பறவைக்கூட்டங்களும் தன்பால்
வருமாறு நினைத்தான். சிங்கம் புலி முதலிய கொடிய விலங்குகளும்
மயில் குயில் முதலிய பறவைகளும் விரைந்து வந்தன. அவற்றை நோக்கி,
'நீங்கள் சென்று அரிச்சந்திரனுக்குரிய கோசல நாட்டிலுள்ள பயிர் மரங்கள்
முதலியவற்றை யழித்துப் பயனில்லாமற் செய்துவிடுங்கள்' எனப்
பணித்தான். அவை சென்று அவ்வாறே செய்யத் தொடங்கின. அந்
நாட்டு மக்கள் இச் செயலை அரசனிடங் கூறினர். அவன்
அமைச்சர்களுட னாய்ந்து வேட்டையாடி விலங்கு பறவைகளைத்
தொலைத்தான். எஞ்சியவை வந்து கோசிகன்பால் நடந்த செயல் கூறின.
கோசிகன் சினந்து, கொடிய பெரும் பன்றி யொன்றைப் படைத்து நாட்டை
நாசஞ்செய்யுமாறு கூறி விடுத்தான். பன்றியின் செயலறிந்து வேந்தன்
அதன்மேற் பாணத்தை ஏவினன். அப் பாணம் நெற்றியிற்பட்டுப் பன்றி
சுழன்று மயங்கி நெடுந்தூரத்திற்போய் விழுந்தது. பின்னர் எழுந்து தான்
பட்டபா டுரைத்தது. கோசிகனுக்கு மேலும் கோபத்தீ மூண்டது.
பெருமூச்சுவிட்டான் முனிவன். இரு மூக்குத்துளையின் வழியாக இரு
மோகினிப் பெண்கள் தோன்றினர். "கோபம் சண்டாளம்" என்பர்
ஆதலால், அக் கோபத்திற் பிறந்தவர்கள் புலைச்சியராகத் தோன்றினர்.
அப் பெண்களுக்கு அறுபத்து நான்கு கலைகளையுங் கற்பித்து
அரிச்சந்திரன்பாற் செல்லுமாறு பணித்தான். அவ் வேளையிற் சில
முனிவர் வந்து அரிச்சந்திரன் இங்கு அண்மையில் கானகத்தில்
தங்கியுளன் எனக் கோசிகனிடங் கூறிச் சென்றனர். "நீங்கள் சென்று
இசைபாடிப் பரிசில் கேளுங்கள். வெண்கொற்றக் குடையை முதலிற்
கேளுங்கள்; மறுத்தால் உங்களை மணந்துகொள்ளுமாறு வேண்டுங்கள்;
மற்றெதனையும் பரிசிலாகக் கொடுத்தால் வாங்காதீர்" என வம்பு கூறி
விடுத்தான் கோசிகன். அம் மங்கையரும் அவ்வாறே சென்று கேட்டனர்.
கேட்கத்தகாத பரிசில் கேட்டதால் அவர்களை யடித்து வெருட்டி
விரட்டுமாறு காவலர்க்குக் கட்டளையிட்டான். கன்னியரிருவரும் கலங்கிக்
கௌசிகன்பால் வந்து முறையிட்டனர். முனிவன் கடுஞ்சினத்துடன்
எழுந்து சென்று அரிச்சந்திரன் முடியைக் காலாலுதைத்துச் சிதைத்துத்
தள்ளினன். 'கால் நோகுமே!' என்று கூறிக் கண்ணீர் விட்டழுதான்.
‘பாசங்கு செய்கின்றாய்! கள்ளன் நீ!' என்று கடிந்துரைத்து, 'நீ என்
பெண்மக்களிருவரையும் மணமுடித்துக்கொள்; இல்லையெனில், என்
சினந்தீராது' என்று வற்புறுத்தினன். 'இப் பறைக்குலப் பெண்களை நான்
மணப்பேனா? மணக்கமாட்டேன்! என் கண்ணை வேண்டினும் ஈவேன்!
நான் புரக்கும் மண்ணை வேண்டினும், என் வாழ்வை வேண்டினும்
ஈவேன்!' என்றான். உடனே கோசிகன் 'நீ யுரைத்தபடி உன் நாடு நகர்
முழுவதையும் கொடு' எனக் கூறி வாங்கிக்கொண்டான். நாட்டை விட்டு
நீங்குமாறு கூறினன். நாட்டை விட்டு நீங்கும்போது 'நான் உன்னிடத்தில்
முன்னர் வேள்விக்காக அடைக்கலமாக வைத்த பொருளை இப்போது
கொடு' என்றான். 'அப் பொருள் தனியே என்னிடத்தில் இல்லையே!
கருவூலத்திற்றானே யிருக்கிறது' என்றான். 'நீ எனக்குக் கொடுக்கும்போது
அப் பொருள் நீங்கலாக மற்றவற்றைக் கொடுத்தேன் என்று விளக்கங்
கூறிக் கொடுத்திலை! ஆதலால் அது நீ கொடுக்கவேண்டியதுதான்!'
என்றான். அரசனும் வாய்மை தவறும் என்பது கருதி ஒப்பினன். நாற்பது
நாள் வரையறை செய்து ஒரு மறையவனையும் உடன் அனுப்பினன்.
அரிச்சந்திரனும் அவன் மனைவியும், தேவதாசனும் முதலமைச்சன்
சத்தியகீர்த்தியும், தரகனாகிய மறையவனும் கோசல நாட்டினைக்
கடந்து காசி வந்து சேர்ந்தனர்.
காசி
வந்து சேர்வதற்குள் அவர்கள் பட்டபாடு கணக்கிறந்தன.
கட்டெறும்பு, தேள், பூரான், கருங்குளவி, அரணை, பாம்பு
முதலியவற்றைப் படைத்துக் கானகத்து நடக்கும் வழியெல்லாங் கிடக்கச்
செய்தான் கௌசிகன். மின்னலும் இடியும் கூடி விடா மழை பொழியச்
செய்தான் அவன். பூதமும் பேயும் வந்து அச்சுறுத்துமாறு வஞ்சகம்
புரிந்தான் அவன். இவ் விடையூறுக ளனைத்தையும் பொறுமையால்
நீக்கி வந்தனர். அன்றியும், இடைவழியில் மறையவனும் 'கடனைக்
கொடு!' என்று வற்புறுத்தினன். இன்மொழி கூறி அம் மறையவனையும்
தம்முடனழைத்து வந்து சேர்ந்தனர். காசி நகரச் சிறப்பினைக் காவலனும்
காரிகையும் கவலையொருபுற மிருக்கக் கண்டு வியந்து மறுகின் நடுவே
சென்றார். பின்னர்க் கோயில் புகுந்து பரமன் விசுவநாதனைக் கண்டு
பணிந்து அடுத்துள்ள அம்பலங் கண்டு ஆங்கமர்ந்தனர். சத்தியகீர்த்தி
சமையலுக்கு வேண்டும் பொருள்கள் வாங்கிவரச் சந்திரமதி அடிசில்
சமைக்க யாவரும் உண்டு உறைந்தார்கள். சுக்கிரன் ஆகிய மறையோன்
சுடுசொற் கூறிக் 'கடனைத் தராமல் எங்குஞ் செல்லக்கூடாது' என்று
தடுத்தான். அரிச்சந்திரன் செய்வதொன்றுமறியாது திகைத்துப் பேசாமல்
இருந்தான். 'என்னையும் மகனையும் விற்று முனிவர் கடனைத் தீருங்கள்'
என்று சந்திரமதி துணிந்து கூறினள். விதிவழி இதுவென வருந்தித் தன்
மனைவி தலையினும் மைந்தன் தலையினும் புல்லினை யேற்றித் தெருவில்
நடத்திச் சென்றான். 'பொன் போன்ற மனைவியையும் புதல்வனையும்
கடனுக்காக என் தீவினையால் விற்கின்றேன்! வாங்குவோர் பொருள்
கொடுத்து வாங்குக' என்று விலை கூறினன். விலை கூறிச் செல்லும்போது
விசுவாமித்திரனால் விடுக்கப்பட்ட வேதியன் ஒருவன் வந்து
ஆனைமேனின்று எறியும் கவண் கல்லுயரம் பொருள் கொடுத்து
வாங்கினன். அவ் வேதியன் தீத்தெய்வம் ஆவன். வடிவ மாறி
மறையோனாக வந்தவன் அவனே. ஆவணச்சீட்டு வரைந்து கொடுத்து
அப் பொருளை வாங்கி உடன்வந்த மறையோன் ஆகிய சுக்கிரனுக்குக்
கொடுத்துக் கடன் தொல்லை கழிந்ததெனக் கருதினன் அரிச்சந்திரன்.
|