பொருளை
வாங்கிய சுக்கிரன் அரிச்சந்திரனைப் பின்றொடர்ந்து
'எனக்குக் கூலிகொடுக்கவேண்டாமா? நான் உங்களுடன் நாற்பது நாளும்
அலைந்து படாத பாடுபட்டு வருந்தினனே! எனக்குக் கூலி கொடுக்கத்தான்
வேண்டும்' என்றனன். மன்னனும் 'கொடுக்கிறேன் வா!' என்று கூட்டிச்
சென்றான். அமைச்சன் சத்தியகீர்த்தியை நோக்கி, 'நீ என்னை விற்று இம்
மறையோனுக்குப் பொருள் கொடுத்து விடுப்பாய்!' என்றான். அமைச்சன்
வருந்தி 'மன்னர்க்கு மன்னன்(சக்கரவர்த்தி) ஆகிய உன்னை நான் விலை
கூறுவேனோ! என்னை நீ விற்றுக் கடன் கொடு' என்று காலில் விழுந்து
மன்றாடினான். அரிச்சந்திரன் 'விசுவாமித்திரன் எண்ணத்திற்கு
மாறுபாடாகும் உன்னை விற்பது' என்று மறுத்தான். பின்னர் இசைந்து மன்னனை விலைகூறிப் புலையன் வீரவாகுவுக்கு முறிச்சீட்டெழுதிக்
கொடுத்து விற்றுப் பதினாயிரம் பொன் வாங்கிக் கொடுத்து
மறையோனைப் போக்கினான். புலைச்சேரி நண்ணினான் அரிச்சந்திரன்;
சத்தியகீர்த்தி வருந்திப் பிரிந்தான். வீரவாகு தன் பணியாளனாகிய
அரிச்சந்திரனை நோக்கி, 'நீ இன்றுமுதற் சுடுகாட்டிற் சென்று தங்குவாய்!
அங்குப் பிணஞ்சுட வருவோர் அதற்குரிய பணமும் கொள்ளியாடையும்
வாய்க்கரிசியும் கொடுப்பார்; அவற்றை வாங்கி வாய்க்கரிசியை மட்டும் நீ
சமைத் துண்பதற்கு வைத்துக்கொண்டு பணமும் கொள்ளி யாடையும்
சேர்த்து எனக்குக் கொடுத்துவிடு!' என்று பணித்தான். அவன்
ஆணையின்படி அரசன் சுடலை காத்திருந்தான். அரசன் சுடலை
காத்திருப்பது கேள்வியுற்றுச் சத்தியகீர்த்தி மீண்டும் வந்து கண்டு
மனம் நொந்து சென்றான்.
அரசன்
சுடலை காத்து இவ்வாறிருப்ப, ஆங்கே மறையவனுக்கு
விலையாளாகிய சந்திரமதியும் மைந்தனும் பகலும் இரவும் அவன்
சொற்படி பணியாற்றி வருந்தியிருந்தனர். ஒருநாள் தேவதாசன் அடுத்த
மனைச் சிறார்களுடன் கானகஞ்சென்று தருப்பைப்புல் முதலியவை பறித்து
விறகெடுத்துவரச் சென்றான். தருப்பைப்புல்லைப் பற்றும்போது கோசிகன்
வஞ்சகமாக ஏவிய பாம்பு வந்து கையிற் றீண்டியது; நஞ்சு தலைக்கேறி ஓர்
ஆலமரத்தடியில் விழுந்து இறந்தான். அவனுடன் சென்ற
மறையோர்களெல்லாரும் கண்டு வருந்தியொன்றுஞ் செய்ய வறியாது
திகைத்து அவரவர் மனைக்குச் சென்றார்கள். அவர்களிற் சிலர் தன்
மைந்தன் வரும் வழியை எதிர்நோக்கி நின்ற சந்திரமதிக்கு நிகழ்ந்த
செயல் கூறிச் சென்றனர். இறந்ததையறிந்து விழுந்தாள்; மயங்கினள்;
பெருமூச்சுவிட்டாள்; என்ன செய்வதென்றறியாது திகைத்தாள்.
எவ்வாறேனும் மகனை எடுத்து அடக்கம் செய்துவரவேண்டும் என்று
துணிந்தாள். வாய்விட்டுக் கூறாது மனத்துளடக்கிச் செய்யவேண்டிய
பணிகள் யாவும் செய்து முடித்தாள். இரவு பத்து நாழிகைக்குமேல்
தன்னை யடிமை கொண்ட கொடிய மறையோனிடங்
|