- 206 -

(இ-ள்.) அப்பிறப்பில்-முன்னைப் பிறவியில், அமர்ந்ததன் காதலி - விருப்பமுள்ள தன் தேவியின், ஒப்புஇல் செய்கை - ஒவ்வாத செயலை, உணர்ந்தது - (அப்பொழுது உண்டான முற்பிறப்புணர்வால் மயில்) அறிந்தது;  உணர்ந்தபின் - --, தப்பு இல் - தவறு இல்லாத, அன்னது - அம்மயில், மிசை - மேலே, குப்புறா - பாய்ந்து, சாரன்  கண்களை-சோர நாயகனாகிய பாகன்கண்களை, குத்தி அழித்தது - (தன்) கூரிய அலகினால் குத்தி அழித்துவிட்டது.  (எ-று.)

மயில், முற்பவவுணர்வால் காதலியின் செயலை யறிந்து பாகன்கண்களை அழித்த தென்க.

முற்பவவுணர்வு இம்மயிலுக்கு இருந்தது என்பதை, ‘உதிக ஸம்ருதி‘  என்னும் (வாதி, 3-39.)  சுலோகத்தால் அறிக.  குப்புஉறா - குப்புற்று,குதித்து.      (12)

167.  முத்த வாணகை யாண்முனி வுற்றனள்
  கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும்
  மத்த கத்தை மடுத்து மறித்தது
  தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே.

(இ-ள்.) (அச்செயலைக் கண்ட), முத்த வாள் நகையாள் - முத்தென ஒளிரும் பற்களையுடைய அமர்தமதி, முனிவுற்றனள் - சினம் மிகுந்து, கை தலத்து ஒரு திரள் கல் வீசலும் - கையில் ஒரு திரண்ட கல்லை எடுத்து அம்மயிலின் மேல் எறிதலும், (அக்கல்லானது), மத்தகத்தை மடுத்து மறித்தது - மயிலின் தலையில் பட்டு மேலும் ஓடவொட்டாது தடுத்தது, மஞ்ஞை - (அதனால் அம்) மயில், தத்தி - தள்ளாடி நடந்து, தரைப்பட வீழ்ந்தது - பூமியில் வீழ்ந்துவிட்டது. (எ-று.)

அரசி, மயிலின்மேல் கல் எறிய அது தரையில் வீழ்ந்த தென்க.

திரள்கல் என மாறுக. வீசல் - எறிதல், மடுத்தல் - தாக்குதல், மறித்தல் - தடுத்தல்.  அடிப்பட்ட வருத்தத்தால் தத்தி நடந்த தென்க.  உற்றனள், முற்றெச்சம்.       (13)