- 207 -
168.  தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள்
  நாய்பின் னோடி நலிந்தது கவ்விய
  வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது
  தீமை செய்வினை செய்திற மின்னதே.

(இ-ள்.) முன் தாய் ஆகி இறந்து பிறந்தவள் நாய்-முற்பிறப்பில் தாயாயிருந்து இறந்து இப்பொழுது நாயாய்ப் பிறந்திருப்பது, பின் ஓடி - (மயிலின்)   பின்னே ஓடி, நலிந்து - வருத்தி, அது கவ்விய வாய் முன் -அது கவ்விய இடத்திலேயே, மஞ்ஞை - மயில், மடிந்து உயிர் போயாது - இறந்து உயிர் சென்றது;  தீமை செய்வினை செய்திறம்-முற்பிறப்பிற் செய்த தீவினை பயனைச் செய்யும் விதம், இன்னது - இவ்வண்ண மாகும். (எ-று.)

மயில் உயிர் நீங்குஞ் சமயத்தில் நாய் சென்று  கவ்வ இறந்த தென்க.

‘நலிந்தது கவ்விய வாய்முன் மஞ்ஞை மடிந்தது‘ என்பதற்கு, (கல்லெறிய யுண்டதனால்) நலிவுற்றதாகிய மயில் (தன்னைக்) கவ்விய வாயிலேயே இறந்தது என்றும் கூறலாம்.  முன் தாய், என மாறுக.                         (14)

169.  நாயின் வாயில் நடுங்கிய மாமயில்
  போய தின்னுயிர் பொன்றின மன்னவன்
  ஆயு மாறறி யாத விசோமதி
  நாயை யெற்றின னாய்பெய் பலகையால்.

இ-ள்.) நாயின் வாயில் நடுங்கிய மாமயில் பொன்றின மன்னவன் இன் உயிர் - நாயின் வாய்ப்பட்டு  நடுங்கிய மயிலாகிய இறந்துபோன யசோதரராஜனுடைய இனிய உயிர், போயது - நீங்கிப் போயிற்று; (அதனை), ஆயும் ஆறு அறியாத - ஆராய்ந்து அறியும் முறைமை அறியாத, இசோமதி - யசோமதி யென்னும் அரசன், நாய் பெய்பலகையால் - (சூதாடு கருவியாகிய) நாயை வைத்திருக்கும் நெத்தப் பலகையால், நாயை - அந்நாயை, ஏற்றினன் -அடித்துக் கொன்றான். (எ-று.)