- 220 -

அலங்கரித்த முடிசூடிய வேந்தன், நன்று - நல்லது,  நாம்முன் வளர்க்க விடுத்தது - நாம் முன்னர்ப் புலையனிடம் வளர்க்க விடுத்ததாகிய ஆட்டினை, சென்று தம் என- (கடிது) சென்று தாரும் என்று ஏவ, ஒற்றர் சென்றனர் - ஒற்றர்கள் சென்று கொணர,  பின் - --, அந்தணர் - --, இது நன்று என்று - இப் புனிதஆடு நல்லது என்று, நயந்தனர் - விரும்பினர். (எ-று.)

மன்னன் ஏவலால் கொணர்ந்த மறியைக் கண்டு மறையவர் விரும்பினர் என்க.

அம்பு பிளந்த வழியால் வெளிவந்த (184) வன் தகர்க் குட்டியைப் புலையனிடம் வளர்க்க விடுத்திருந்தா னாதலின், நாம் முன் வளர்க்க விடுத்தது என்றான்.  தம் - கொண்டு வாரும். ‘ஏனோரும் தம்மென‘  (மதுரைக்காஞ்சி).                              (35)

190.  சென்று நல்லமிர் துண்டது தின்றனர்
  அன்று மன்ன னிசோதர னன்னையோ
  டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென
  நன்று சொல்லினர் நான்மறை யாளரே.

  (இ-ள்.) நான்மறையாளர் - நான்மறையோதும் அந்தணர், சென்று - (யாகசாலை) சென்று, நல் அமிர்து உண்டு-யாகசேடமாகிய தேவவுணவை உண்டு, அது தின்றனர் - அவ்வெருமையூனையும் தின்றுகொண்டே,  அன்று - அப்பொழுது, ‘இசோதர மன்னன் - யசோதர வேந்தன், அன்னையோடு-தாயாகிய சந்திரமதியோடு, உம்பர் உலகினுள் - விண்ணுலகில், ஒன்றி - ஒருங்கிருந்து, வாழ்க - நீடுவாழ்க‘ என - என்று, நன்று சொல்லினர் - மிக்க ஆசி கூறினர்.

எருமையூனைத் தின்னும் அந்தணர், அரசனையும் அன்னையையும் அமரருலகில் வாழ ஆசிகூறினரென்க.

நான் மறை - நான்கு வேதம். அவை; ருக்கு, யஜுர் சாமம், அதர்வணம் என்பன. இசோதரன் என்று வருமிடத்தெல்லாம் யசோதரன் என்று கொள்க.  எருமையூன் என்றுகூற அஞ்சி, ‘அது‘ என்று கூறினார் ஆசிரியர்.    (36)