- 230 -

கையில் - கூரிய முள்ளை¬யுடைய சம்மட்டியினால், கொலை செய்தனர் -அடித்துக் கொன்றனர். (எ -று.)

ஏவலர், எருமையைச் சித்ரவதைச் செய்து கொன்றன ரென்க.

காரநீரை அதன் வயிறுஆர ஊட்டிக் காய்ச்சி என்க.

காரநீர் உப்பு, மிளகு, கடுகு மூன்றையும் அரைத்துக்கரைத்த நீர். வடமொழியில் க்ஷாரநீர் என்பர்.  உறுப்பு - காது வால் முதலியன. சலாகை, இருப்புகோல்.  கார நீரை வயிறு நிறைய விட்டு முழங்காலிற்கு மேலுள்ள பகுதியை எரித்ததாக வடமொழி நூல் கூறுகின்றது. “கீலிதேஷு சரணேஷு சதுர்ஷு, க்ஷாரவாரி பரிமோஷிதகுக்ஷிம், ஊர்த்வஜாநு மதஹந் ந்ருபப்ருத்யா, ஸ்தேக்ருபாவிரஹிணோ மஹஷிம்தம், (வாதி 3, 72.) என்பது காண்க.

206.  ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி
  மேய மேதித் தசைமிக வெந்ததை
  வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள்
  மாயை செய்தன ளென்றனர் மற்றையார்.

(இ-ள்.) ஆயிடை - அப்பொழுது, கொடியாள் - கொடியவளான, அமிர்தமதி - --, மேய மேதி - (தான்) விரும்பிய அவ்வெருமையின் , தசைமிக வெந்ததை - நன்றாக வெந்த தசையை, வாயில் வைத்து - வாயில் வைத்துச் சுவைத்துத் தின்று, வயிற்றை வளர்த்தனள் - தன் வயிற்றைநிரப்பினாள்; மற்றையர் - அங்கிருந்த பிறர், மாயை செய்தனள் - (இதுகாறும் புலால் உண்ணும் எண்ணத்தை மறைத்து) நம்மை வஞ்சனை செய்தனள், என்றனர் - --.

அமிர்தமதி பிறர்காண மேதித்தசையை  உண்டாளென்க.

ஆயிடை, அவ்விடத்தே எனினுமாம்.  “நோயினாசைகொல்... மேதிப் பிணத்தை மிசைந்தனள்” என்பர் மேலும் (யசோ. 212) மற்றையார்.   உழையவர்.           (52)