207. |
இன்னு மாசை யெனக்குள திவ்வழித் |
|
துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது |
|
தன்னி னாய குறங்குக டித்தது |
|
தின்னி னாசை சிதைந்திட மென்றனள். |
(இ-ள்.) (அரசி, அந்தரங்க
சேடியரை நோக்கி), இன்னும் ஆசை - இன்னும் ஓர் ஆசை, எனக்கு உளது-எனக்கு இருக்கின்றது,
(அஃதியாதெனின்), இவ்வழி துன்னி வாழ் தகர் ஒன்று உளது - இவ்வரண்மனையைச் சேர்ந்து
வாழும் ஆட்டுக்கிடாய் ஒன்று இருக்கின்றது, இன்று -இப்பொழுதே, அது தன்னின் ஆய குறங்கு
- அவ்யாட்டின் தொடை யூனை, கடித்து அது தின்னின்-கடித்துத் தின்பேனாயின், ஆசை சிதைந்திடும்,
என் ஆசை தீர்ந்துவிடும் (ஆதலின் கடிது கொணர்க), என்றனள் - என்று ஏவினாள். (எ-று.)
அமிர்தமதி, தகரின் தசையைத் தின்ன விரும்பினாளென்க.
குறங்கு - தொடை. ஒன்றன் உடல் சுவையுண்டார் மனம் படைகொண்டார் நெஞ்சம்போல் செல்லுமாகலின்,
எருமைத்தசையைத் தின்0றவள் ஆட்டின் தசையை விரும்பினாள்.
(53)
இதுமுதல்
ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர்
பேசிக்கொள்ளுதல்
208. |
அனங்க னான பெருந்தகை யண்ணலைச் |
|
சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில் |
|
கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள் |
|
மனங்கொ ளாவொரு மானுட நாயினை. |
(இ-ள்.) அனங்கனான பெரும் தகை அண்ணலை - காமனாகிய பெருந்தன்மையுடைய
அரசனை, சினங்கொளா - சினங்கொண்டு, நஞ்சினில் -விஷத்தால், உயிர் செற்றனள்
- மடித்தாள்; கனங்கொள் காமம் கலக்க -மிக்குற்ற கழிகாமம் தன் உள்ளத்தைக் கலக்க
(அதனால்),
|