224. |
அருவினை முனைகொ லாற்ற லகம்பன
னென்னு நாமத் |
|
தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த1
முன்னர்த் |
|
தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர் |
|
மருவிய நினைப்பு மாற்றி வந்தது2
கண்டி ருந்தான். |
(இ-ள்.) அருவினை முனை கொல்
ஆற்றல் - அழித்தற்கரிய வினையாகிய பகையை வெல்லும் சக்திவாய்ந்த, அகம்பனன்
என்னும் நாமத்து ஒரு முனி - அகம்பன ரென்பாரொரு தபோதனர், தனியன் ஆகி - தனித்து,
முன்னர் ஒரு சிறை இருந்த - முன்னாக ஒரு பக்கத்தே இருந்த, தருமுதல் யோகு கொண்டு -
மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்து, தன் அளவு - தாம் வரையறுத்த காலஎல்லை,
இறந்த பின்னர் - கடந்த பிறகு, மருவிய நினைப்பு மாற்றி - தம் தியானத்தை மாற்றி,
வந்தது கண்டு இருந்தான் - சண்டகருமன் (கோழிகளுடன்) வந்ததைக் கண்டார்.
அகம்பனர், தாம் கொண்ட யோகம் நீங்கிக் கண்டாரென்க.
சிறை - பக்கம் , தருமுதல் முன்னர் எனினுமாம். தரு, அசோகு என்றல் மரபு. யோகு -
யோகம்: படிமைபோல் பதுமாசனம் முதலியவற்றில் வீற்றிருந்து தியானித்தல். ‘யோகமே
தியானம்‘ (நிகண்டு, 11.) எனவும், ‘யோகொடு கறையற முயல்வதோர் கடவுள்‘ (சீவக.
96.) எனவும் கூறியிருப்பன அறிக. காலத்தை வரையறுத்தே யோகம்கொள்வது மரபு: இதனைச்
சாமாயிக காலம் என்பர். மருவிய -மேற்கொண்டிருந்த. நினைப்பு - தியானம். யோகம்
செய்ய மேற்கொண்ட கால எல்லை கழிந்த பின்னரே வேறு நினைப்பும் செயலும் உண்டாகும்
என்பார், ‘மருவிய நினைப்பு மாற்றி...கண்டு‘ என்றார்.
(5)
|