- 244 -
225.  வடிலநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி
  அடிகணீ ரடங்கி மெய்யி ருள்புரி மனத்தி ராகி
  நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான்
  முடிபொருடானு மென்கொல் மொழிந்தருள் செய்கவென்றான்.

(இ-ள்.) வடிநுனை பகழியானும் - கூர்மையான நுனியையுடைய அம்பினைக் கொண்ட தளவரனும், மலர் அடி - முனிவன் திருவடியை, வணங்கி - --, வாழ்த்தி - துதித்து, அடிகள் நீர் - முனிவராகிய நீவிர், மெய்யில் அடங்கி - பொறி வழிகளில் சேறலின்றி அடங்கி, அருள்புரி மனத்திர் ஆகி - கருணை புரியும் உள்ளத்தீராய், நெடிதுஉடன்இருந்து - நீண்டநேரம் யோகத்திலிருந்து,  நெஞ்சில் நினைவது - மனத்தில் சிந்திப்பதுவும். ஓர் நினைவு தன்னால் முடி பொருளும் - ஒப்பற்ற அச் சிந்தனையினால் முடியும் பயனும், என் - என்ன? மொழிந்து அருள் செய்க - அதனைமொழிந்தருள்வீராக, என்றான் - என்று வேண்டினான்.

 தளவரன், முனிவரை வணங்கி நீவிர் செய்யுந் தியானமும் அத் தியானத்தா லடையும் பயனும் கூறுக வென்றானென்க.

அடிகள், உயர்ந்தோரை யழைக்கும் உயர்சொற் கிளவி. தளவரன், முனிவரை நோக்கி, ‘தாங்கள் சிந்திப்பதுவும் அதன் பலனும் என்?‘ என்று வினாவினான் என்று வட மொழி யசோதர காவ்யத்தில் (4, 12) உளது : அதற்கேற்ப, நினைவதும் என்று உம்மை கூட்டிப் பொருள் கூறப்பட்டது. முன்னர் இரண்டு பாட்டுக்களில், நினைவதும் அதன் பயனும் கூறப்படுதல் காண்க.  பொருள்  - ஈண்டுப்பயன்.   (6)

226.  ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச்
  சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலுமென்றே
  பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே
  கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே.

(இ-ள்.) ஆர் அருள் புரிந்த நெஞ்சின் - நிறைந்த அருளைப் புரிந்த உள்ளத்தினையுடைய, அம்முனி - அந்த முனிவர், அவனை நோக்கி -