நாககுமார காவியம்

கவி என்பவர் கன்னட மொழியில் நாககுமார சரிதம் இயற்றியுள்ளார்.  இதுதவிர இரத்னாகரகவி எழுதிய நூல் ஒன்றும் கன்னடத்தில் உள்ளது.  இவ்வாறாகப் பல மொழிகளிலும் போற்றிக் காவியமாக்கப் பெற்ற சிறப்புடையது இந் நாககுமார சரிதம் என்பது தெரிய வரும்.

காவிய ஆசிரியர்

தமிழ் நாககுமார காவியத்தை ஆக்கிய ஆரியர் பெயர் அறியக்கூட வில்லை.  இக் காவியத்திற்கு வேறு நல்ல ஏட்டுச் சுவடிகள் கிடைக்குமானால்,  ஒருகால் தெரிவதற்கு ஏதுவுண்டு.  இதன் ஆசிரியர் சைன சமயத்தவராவர் என்பதும் சைன சமயக் கோட்பாடுகளில் தேர்ந்தவர் என்பதும் இக்காவியத்தால் புலப்படும்.  கதைகளைத் தொகுத்தும் வகுத்தும் உரைக்கும் கலையில் இவர் கைதேர்ந்தவர் என்பது இக்காவிய நடையினால் நன்கு விளங்கும்.

நன்றியுரை

‘தமிழாய்வு‘ இதழில் ‘அச்சில் வாரா அருந்தமிழ்‘ வெளியீட்டு வரிசை யில் இந்நூலை வெளியிடுவதற்கு மூலப்படியைத் தேடிப் பெற்றுத் தந்த பெரியார் டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களுக்கும் பழுதான ஒரு பிரதியைப் படி யெடுத்துக் காப்பாற்றி வைத்து வழங்கிய தச்சாம்பாடி சின்னசாமி நயினார் அவர்களுக்கும் தமிழ் மக்களின் நன்றி என்றும் உரியது.  இந் நூலை வெளியிட அவ்வப்போது ஊக்கி ஆவன செய்துவரும் தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர், டாக்டர், ந.சஞ்சீவி அவர்களுக்கு நன்றி பாராட்டும் கடப்பாடுடையேன்.  இந்நூலின் அச்சுப் பணியில் எனக்கு அவ்வப்போது உதவிய திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதியில் பணிபுரியும் ஆராய்ச்சித் துணைவர் கு.மோகனராசு, தமிழ்த் துறை ஆராய்ச்சி மாணவர் அ.நாகலிங்கம் ஆகியோருக்கும் என் நன்றி உரியது.

‘தமிழாய்‘வில் வெளியிடப்படும் இக்காவியத்தைத் தனி நூலாகவும் வெளியிட வாய்ப்பளித்த பல்கலைக் கழகத் துணைவேந்தர் பெருந்தகை தாமரைச் செல்வர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களுக்கும் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக்கும் என் நன்றியும் வணக்கமும் உரியனவாகுக.

சென்னை,
திருக்கார்த்திகைத்
திருநாள்,  8-12-73

மு. சண்முகம் பிள்ளை

- - - -