பெருங்காப்பியம் என்பதற்கும் சிறுகாப்பியம்
என்பதற்கும் இலக்கணம் கூறவந்த
தண்டியாசிரியர் அறம், பொருள், இன்பம்,
வீடு என்னும் நால்வகை உறுதிப்பொருளையும்
தன்னகத்தே அடக்கிக் கூறும்
நூல் பெருங்காப்பியம் ஆகும் என்றும், அவற்றுள் சிலநிற்க
ஒன்றையோ
இரண்டையோ கூறும் நூல்கள் சிறுகாப்பியம் ஆகும் என்றும் ஓதுவாராயினர்.
இவர் வகுத்த இலக்கணப்படி நோக்குவார்க்கு மேற்கூறப்பட்ட ஐம்பெருங்காப்பியம்
ஐஞ்சிறுகாப்பியம் என்னும் இரண்டு வழக்கும் தவறுடைய வழக்கே என்பது
புலனாம்.
பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய சீவகசிந்தாமணியை எல்லாவகையானும்
இச்சூளாமணி
பெரிதும் ஒத்திருக்கவும் இவ்விரண்டனுள் ஒன்றனைப்
பெருங்காப்பியம் என்றும்
மற்றொன்றனைச் சிறுகாப்பியம் என்றும் கூறுதல்
எங்ஙனம் பொருந்தும்? மேலும்
தண்டியாசிரியர் இலக்கணப்படி ஆராய்வார்க்குச்
சிந்தாமணியைவிடச் சூளாமணியே
பெருங்காப்பிய விலக்கணம் முழுதும் அமைந்ததாதல்
புலப்படும். இலக்கண வகையாலன்றிக் காப்பியப் பண்புவகையால் நோக்குங்கால்
சிந்தாமணி
தலைசிறந்த காவியம் ஆகும் என்பதும், சூளாமணி இரண்டாந்தரமான
காவியம் ஆகும்
என்பதும் உண்மையே. தலைசிறந்த பெருங்காப்பியமாகிய சிந்தாமணியை
அடியொற்றி
அதற்குப்பின் தோன்றிய பெருங்காப்பியமே இச்சூளாமணியாகும். சிந்தாமணியையும் சூளாமணியையும் ஒருசேரப் பயின்றவர்களுக்குச் சிந்தாமணியின்
செய்யுளைக் காட்டிலும் இச்சூளாமணியின் செய்யுட்கள் இனிய ஓசையுடனவாய்ச்
சிறந்திருத்தல் புலனாகும். சிந்தாமணியின் பொருட்செறிவினையும் சூளாமணியின்
இன்னோசைத்திறத்தையும் யாம் ஒருசேரக் கம்பராமாயணத்திற் காண்கின்றோம்.
இவ்வாற்றால் இவ்விரண்டு பெருங்காப்பியங்களையும் அடியொற்றி ஒப்பற்ற
பெருங்காப்பியம்
ஒன்றனைப் படைத்தருளிய கம்பநாடர் திருத்தக்கதேவருக்குக்
கடமைப்பட்டுள்ள அளவிற்கு
இச்சூளாமணியின் ஆசிரியராகிய தோலாமொழித்தேவருக்கும்
கடமைப்பட்டுள்ளார் என்று
கருதுகின்றோம். கம்பநாடர் செய்யுள் இன்னோசைவகையில் தோலாமொழித் தேவருடைய
செய்யுளோசைத் திறத்தையே மிகுதியாகப் பின்பற்றியுள்ளன என்பதற்கு வேண்டுமளவு
எடுத்துக் காட்டுக்கள் காட்டலாம். ஆயினும் விரிவஞ்சி
விடுக்கின்றோம். சுருங்கக்
கூறுமிடத்துக் கம்பர் செய்யுளுக்கும் தோலாமொழித்தேவர்
செய்யுளுக்கும் ஓசைவகையால்
வேற்றுமை சிறிதுங் காணப்படவில்லை என்று
கூறுகின்றேம்.
|