தொடர்நிலைச் செய்யுட்களைப் பெருங்காப்பியம் என்றும் சிறுகாப்பியம் என்றும்
வகுத்துவழங்கும் வழக்கம் ஆரிய வழக்காகும். அதுநிற்க, இத்தகைய தொடர்நிலைச்
செய்யுட்களை வனப்பியல் என்று தொல்காப்பியரை உள்ளிட்ட நம் தொல்லாசிரியன்மார்
வகுப்பர். அவ்வனப்பியல் நூல்கள் அம்மை என்றும், அழகு என்றும், தொன்மை என்றும்,
தோல் என்றும், விருந்து என்றும், இயைபு என்றும், புலன் என்றும், இழைபு என்றும்
எண்வகைப்படும். இதனை "அம்மை அழகே தொன்மை தோலே, விருந்தே இயைபே
புலனே இழைபு எனா அப்பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ, நல்லிசைப்
புலவர்................ வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே" எனவரும் (செய்யுளியல். 1)
தொல்காப்பியத்தானும் உணர்க.

இந்த எட்டுவகை வனப்பும் தொடர்நிலைச் செய்யுள் அனைத்திற்கும் உரியன அல்ல.
இவற்றுள் தத்தமக்கு ஏற்கும் ஒன்றும் பலவுமாகிய வனப்புக்களை ஏற்றுவரும் என்க.
இவ்வனப்பினுள் தொடர்நிலைச் செய்யுளாகிய இச்சூளாமணி தொன்மை என்னும்
வனப்பினைச் சிறப்பாகக்கொண்டு இயன்ற நூலாகும். தொன்மை என்பது பழைய கதையைப்
பொருளாகக்கொண்டு இயற்றப்படும் தொடர்நிலைச் செய்யுள் ஆகும். மேலும் இச்சூளாமணி
அடிநிமிர்ந்து ஓடாமல் நான்கடியின் இயலுதலின் அம்மை என்னும் வனப்பினைத் தழுவியும்
செய்யுள் மொழியால் சீர்புனைந்து இயற்றப்பட்டிருத்தலின் அழகு என்னும் வனப்பினைத்
தழுவியும் எழுந்த நூலாகும் இங்ஙனமாதலை,

  "வனப்பியல் தானே வகுக்குங் காலைச்
சின்மென் மொழியால் தாய பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர்பு இன்றே"

(தொல். செய்யு. 233)

எனவும்,

 

"செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின்
அவ்வகை தானே அழகுஎனப் படுமே"

(தொல். செய். 234.)

எனவும் வரும் நூற்பாக்களானுணர்க.
சூளாமணி என்னும் இவ்வனப்பியல் நூல் ஆருகத நூலாகிய பிரதமாநுயோக
மகாபுராணத்தில் கூறப்பட்ட பழைய கதை ஒன்றனைப் பொருளாகக்கொண்டு எழுந்த
நூலாகும். இதனை இதன் ஆசிரியர்,