இத்திருப்பணி. இத்தகைய செயற்கரிய
செயல்களையும் அஞ்சாது ஊக்கத்துடன்
மேற்கொண்டு பெரும் பொருட் செலவு செய்து
இச்சூளாமணியை இப்பொழுது
வெளியிடுகின்ற சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தார்க்குத் தமிழுலகம் என்றென்றும்
கடமைப்பட்டுளது.
"நல்லதோர் வீணைசெய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுவோ"
என்று வரகவி
பாரதியார் கூறியாங்குப் பல்கலைக் கழகப் பயிற்சி முடிந்தவுடன்
அமிழ்தினுமினிய
நந்தமிழ்மொழிக்கு ஏதேனும் எம்மாலியன்ற எழுத்துப்பணி
செய்தல்வேண்டும் என்னும்
நினைவுமட்டும் நெஞ்சத்தே அழுந்தி நிற்பதாக,
அப்பணி செய்தற்கு ஒல்லாத நல்குரவோடும்
துணைக் காரணங்கள் ஏதும் எய்தாமையோடும்
சிற்றூரில் ஒதுங்கிக் கிடந்த என்னை
இச்சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தாரொடு கூட்டுவித்து எம்மாற்றலினும் மேம்பட்ட
அரும்பெரும் பணிகளை
எமக்குக் காட்டி இனிதின் நிறைவேறுமாறு செய்து இன்னும் செய்க!
இன்னும்
செய்க! என்று ஊக்கிக்கொண்டுமிருக்கின்ற எம்மன்னை செந்தமிழ்த்தெய்வத்தின்
திருவடிகளைவழுத்தி வாழ்த்துகின்றேம்.
வாழ்க செந்தமிழ்!
வயங்குகு சூளாமணி!
|